கொட்டும் மழையில் கடமையை ஆற்றிய போக்குவரத்துக் காவலர்: வைரலாகும் வீடியோ

சமீபத்தில் டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையில் பணிபுரிந்த வீடியோ காட்சியை ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

நம்மில் பெரும்பாலானோர் சாதாரண நாட்களிலேயே அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க பல சமயங்களில் போரடிக்கும். அதிலும், மழைக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டில் சூடாக எதையாவது கொரித்துவிட்டு ஜன்னல் வழியே மழையை ரசிக்க விடுமுறை எடுத்துவிட்டு ஹாயாக இருப்போம். ஆனால், எந்த நேரமாக இருந்தாலும், தம் வேலையின் மீது கொண்ட காதலால் பணியாற்றிக் கொண்டே இருப்பவர்கள் நம்மை சுற்றி இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

காவல் துறையில் பணியாற்றுபவர்கள் மழை, வெயில் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். மழை பெய்கிறதே என அவர்கள் வீட்டில் இருந்துவிட்டால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த வருடம் ஹரியானாவில் காவலர் ஒருவர் கொட்டும் மழையில் வெற்று கால்களுடன் பணிபுரிந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. வெற்று கால்களுடன் பணிபுரிந்தது எதற்காக? அந்த காவலரிடம் ஒரு ஜோடி ஷூ மட்டுமே இருந்தது. அதுவும், மழையில் நனைந்துவிட்டால், மறுநாள் பணிபுரிய இயலாது என்பதால் வெற்றுக் கால்களுடன் பணியில் ஈடுபட்டார்.

இதேபோல், சமீபத்தில் டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையில் பணிபுரிந்த வீடியோ காட்சியை ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். டெல்லி பாஸ்சிம் விஹார் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

காரின் உள்ளிருந்து அவர் இந்த காட்சியை செல்ஃபோனில் வீடியோ எடுத்தார். அந்த போக்குவரத்துக் காவலர் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலையில் திடீரென நின்ற காரை தள்ளி உதவியும் புரிகிறார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலனுக்காக பணிபுரிந்த அந்த போக்குவரத்துக் காவலரை மனமுவந்து பாராட்டுவோம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close