”மாதவிடாயின்போது அலுவலகத்திற்கு வராதீர்கள், எங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது”: அதிகாரி

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், Mumsnet என்ற இணையத்தளத்தில், மாதவிடாயின்போது அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

By: October 11, 2017, 2:21:06 PM

மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா என்ற விவாதம் சமீபகாலங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாதவிடாய் குறித்த சந்தேகங்களையும், அக்காலங்களில் பெண்களின் வலியையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வது குறித்து ஆண்கள் சிந்திக்காத வரை மாதவிடாய் விடுமுறை குறித்த வாதம் வலுவாக போவதில்லை.

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், Mumsnet என்ற இணையத்தளத்தில், மாதவிடாயின்போது அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்திருந்தார். பணியிடங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எத்தகைய அசௌகரியங்களை உணருகின்றனர் என்பதற்கான ஒரு உதாரணமாக உள்ளது.

அப்பெண் ஒருமுறை மாதவிடாயின்போது, அடிவயிற்றில் வலியை குறைக்க, அவ்வப்போது ஒத்தடம் கொடுப்பதற்காக வெந்நீர் அடங்கிய பாட்டிலை தன் கையிலேயே வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர், அப்பெண்ணிடம் ”எதற்காக வெந்நீரை கையிலேயே வைத்திருக்கிறீர்கள்”, என கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்பெண், வயிற்று வலியை குறைப்பதற்காக வெந்நீரை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அவர் திடுக்கிட்டதாக அப்பெண் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 10 நிமிடங்கள் கழித்து அலுவலகத்தின் மனிதவள அதிகாரி (எச்.ஆர்.), அப்பெண்ணிடம் வந்து உடல்நலம் குறித்து விசாரித்து, நலமில்லையென்றால் வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்போதுதான், அப்பெண்ணிடம் விசாரித்த நபர் அந்த விஷயத்தை எச்.ஆர். அதிகாரியிடம் கூறியிருப்பது தெரியவந்தது.

அதன்பின், எச்.ஆர். அதிகாரி அப்பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து, உடல்நல பிரச்சனைகளை தன்னை தவிர்த்து சக பணியாளர்களிடம் கூற வேண்டாம் எனவும், அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அப்பெண் தனக்கு மாதவிடாய் என்பதாலேயே வெந்நீரை வைத்திருந்ததாக கூறியவுடன், அந்த அதிகாரி, “உங்களுக்கு வலியென்றால் நீங்கள் வீட்டிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும். இப்படி மற்றவர்களிடம் இதுகுறித்து கூறுவது தொழில்ரீதியில் அழகல்ல.”, என கூறியிருக்கிறார்.

மாதவிடாயின் அடிப்படை புரிதல்கள் ஆண்களுக்கு இல்லையென்பதையே மேற்கண்ட சம்பவம் காட்டுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Guy reports woman to hr because her periods apparently made him uncomfortable

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X