சூடான டுவிட்டர் மெனுவின் காரசார விவரங்கள். இன்றைய டாப் டிரெண்டிங்.

இன்றைய இணைய தளத்தில் சூடான செய்திகள் ஏராளமாகப் பகிரப்பட்டது. ஸ்மித்தின் அழுகையால் உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்கள், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கண்டனம், “பாவம் மாணவர்கள்” என்ற பரிதாபம், விண்ணில் சுப்ப்ப்ப் என்று பறந்த ராக்கெட் மற்றும் “முழுசா காலா-வா மாறியுள்ள உன் தல தோனியை பார்.” என்று சொல்லும் வரை அனைத்து டிரெண்டிங்க் தான்.

1. #BallTamperingScandal

பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள ஓராண்டு தடையும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்மித் செய்தியாளர்களை சந்தித்தார். பேட்டியில் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். அப்போது அவர் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதது அனைவரின் மனதிலும் துக்கத்தை ஏற்படுத்தியது.

2. #CauveryWaterManagement

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு இன்றுடன் முடிந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கிய நிலையிலும், மத்திய அரசு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை அன்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை காலை இதனை அவசர வழக்காக விசாரிக்க, தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. சனி அல்லது திங்கட்கிழமை தமிழக அரசு மனுத் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. மனுவுக்கு தேவையான ஆவணங்கள் நாளை தயாராகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3. #CBSEPaperLeak

சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 12 ம் வகுப்பின் பொருளாதார பாடமும், 10ம் வகுப்பைச் சேர்ந்த கணிதம் பாடத்தின் வினாத் தாள்களும் இணையதளத்தில் கசிந்தது. இது தொர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த இடண்டு பாடங்களிலும், மாணவர்கள் மறு தேர்வு எழுத வேண்டும் என்று சிபிஎஸ்இ ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தில்லியில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, மாணவர்களின் மறுதேர்வு தேதியை மத்திய இடைக்கால கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

– 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் பொருளாதாரம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும்.
– 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.

4. #GSAT6A

இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 8 ராக்கெட்டுடன் இன்று விண்ணில் பாய்ந்தது. அதி நவீன தொலைத் தொடர்பு சேவைக்காக எஸ். பேண்ட் ஆன்டனாவுடன் ஜிசாட்-6ஏ செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ உருவாக்கயது. இதன் 27 மணிநேர கவுண்டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இந்த நிலையில், 2,140 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிஷம் 46 நொடிகளில் விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி, வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

5. #kaalateaserdhoniversion

பொதுவாகவே தல தோனி என்றால் மாஸ் தான். இதில் தலைவர் ரஜினியும் இணைந்தால் மாஸோ மாஸ். காலா காட்சிகளுடன் தோனியை இணைத்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காலா டீசரின் வசனங்களுக்கு சி.எஸ்.கே வீரர்கள் வாய் அசைக்க டாப்டக்கராக உள்ளது இந்த வீடியோ. நீங்களே பாருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close