புரோமோஷனை விட குழந்தையின் பசியே முக்கியம்... பயணியின் குழந்தைக்கு பாலூட்டிய விமான பணிப்பெண்

‘அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே…’ என்ற வரிகள் பொய்த்து போகாது என்பதன் உதாரணமாக இருக்கிறார் இந்த விமான பணிப்பெண்.

விமானத்தில் பயணிக்கும் தாயிடம் இருந்த ஃபார்முலா பால் தீர்ந்துபோனதால் தானே குழந்தைக்கு பாலூட்டிய விமானப் பெண்ணின் தாயுள்ளம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் பட்ரிஷா ஆர்கனோ. இவர் விமான பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வருகிறார். தான் பயணித்த விமானத்தில் இருந்த குழந்தையின் அழுகையால் மனமுருகி இவர் பாலூட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தாய்களை ஒரு நிமிடம் கண் கலங்க வைத்துள்ளது.

குழந்தைக்கு பாலூட்டிய விமான பணிப்பெண்

தினமும் பணிக்காக செல்வது போலவே பட்ரிஷா, ஒரு விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்படும் வரை எவ்வித சலனமும் ஏற்படவில்லை. ஆனால் விமான நிலையத்தில் இருந்து இவர் பயணித்த விமானம் கிளம்பிய தருணம், திடீரென ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அக்குழந்தை தாய் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

patrisha organo, விமான பணிப்பெண்

பயணியின் குழந்தைக்கு பாலூட்டிய பட்ரிஷா ஆர்கனோ

இதனை கவனித்த பட்ரிஷா, குழந்தையின் தாயிடம் சென்ற என்ன ஆனது என்று விசாரித்தார். அப்போது குழந்தைக்கு பசியில் அழுவதாக கூறினார். உடனே பட்ரிஷா தாயை பாலூட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த தாய் வைத்திருந்த ஃபார்முலா பால் தீர்ந்துபோனதாகவும், தாய் பாலும் வற்றிப் போனதாக கண் கலங்கியபடி கூறியுள்ளார்.

இதனை கேட்ட பட்ரிஷாவுக்கு மனதில் ஒரு கலக்கம். அழுகையை நிறுத்தாத குழந்தையை பார்த்த பட்ரிஷாவுக்கு குழந்தையின் பசி மட்டுமே உணர முடிந்தது. ஆனால் அதே நேரம் அவர் கேபின் க்ரூவில் புரோமோஷன் பெறுவதற்கான தேர்வும் நடைபெற்று வந்த தருணம். இருப்பினும், தனது புரோமோஷனை யோசிக்காமல் குழந்தையை கையில் பெற்றுக்கொண்டார்.

patrisha organo, விமான பணிப்பெண்

விமானத்தில் பாலூட்டிய தருணம்

விமானத்தில் இருந்த பணியாளர்களின் உதவியையும், அனுமதியையும் பெற்று ஒரு அறைக்கு சென்றார். பசியால் துடித்திருந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டினார். பசி தீர்ந்த குழந்தை பட்ரீஷா மடியிலேயே தூங்கியது. அதனை பார்த்த பட்ரிஷாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று தாயிடம் கொடுத்தார். நிம்மதியாக தூங்கும் குழந்தையை பார்த்த தாய் கண்கள் கலங்கி ஒரு நிமிடம் பட்ரிஷாவை பார்த்தார். அந்த கண்களில் குழந்தையிடம் தெரியும் அதே நிம்மதியும் மகிழ்ச்சியும் தெரிந்தது. பட்ரிஷாவுக்கு நன்றி கூற, பட்ரிஷாவும் ஒரு புன்னகையிலேயே பதில் சொன்னார். அந்த புன்னைகையில் மறைந்திருந்தது இரண்டு தாய்களின் உணர்வு.

இந்த சம்பவத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்ரிஷா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். சில நிமிடங்களிலேயே அவருக்கு பாராட்டும் அன்பு மழையும் பொழிந்தது. இணையத்தளம் முழுவதும் பட்ரிஷாவின் பாராட்டுத்தக்க செயலே நிறைந்துள்ளது. மேலும் இவரது கணவரும் நான் ஒரு சூப்பர் ஹீரோவை திருமணம் செய்திருக்கிறேன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close