கால் முடிகளை அகற்றாமல் விளம்பரத்தில் நடித்த மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்

தன் உடலில் இயற்கையாக தோன்றும் சரும முடிக்காகவும் பெண்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர், அவர்கள் அணியும் உடைகளின் பெயரால், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். பிரியங்கா சோப்ரா, கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடி நிறத்திலான சால்வை அணிந்திருந்ததற்காகவும், பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததற்காகவும் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். தங்களுக்கு பிடித்ததுபோல் உடை அணியும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் தாக்கப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. உடை மட்டுமல்ல, தன் உடலில் இயற்கையாக தோன்றும் சரும முடிக்காகவும் பெண்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

ஸ்வேதிஷை சேர்ந்த அர்விதா பிஸ்ட்ரம் பிரபல மாடல். பிரபலமான பல நிறுவனங்களுக்கு இவர் மாடலாக இருந்துவருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஷூ விளம்பரம் ஒன்றுக்காக, பிங் நிற உடையில், சாம்பல் நிற ஷூக்களை அணிந்து நடித்திருந்தார். தன் கால்களில் உள்ள சரும மென் முடிகளை அகற்றாமல் அந்த விளம்பரத்தில் அர்விதா நடித்தார்.

இந்நிலையில், அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டகிராம் கணக்கிலும் பகிர்ந்தார். இதையடுத்து, காலில் முடிகளை அகற்றாமல் விளம்பரத்தில் நடித்ததற்காக பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருக்கின்றனர். அதில், சிலர் அவருக்கு பாலியல் அச்சுறுத்தல்களும் விடுத்தனர்.

இதையடுத்து, ”ஏன் ஒரு பெண்ணுக்கு, அவள் மாடலாக இருந்தபோதிலும், அவள் நடிக்கும் விளம்பரங்களில் எப்படி தோன்ற வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு இல்லையா? அவளென்ன அடிமையா? உலகில் உள்ள ஆண்கள் அனைவரும் விரும்பும் விதமாகத்தான் அவள் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமா?”, என கேள்வி எழுப்பி அதனை யுடியூபில் வீடியோவாக வெளியிட்டார்.

எதிர்ப்புகளுக்கும், பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்லும் அர்விதாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

×Close
×Close