வாழ்க்கையை புரட்டிய தந்தையின் இறப்பு: கல் உடைத்து குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுமி

ரோத்னா, தன் தாயின் சிரமங்களை போக்க அவருடன் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வருகிறார். 6 வயதிருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார்.

தாய், தந்தையில் ஒருவர் இறந்தாலும் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். அதிலும், குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை ஈட்டும் நபர் இல்லையென்றால் நம் வாழ்க்கையையே அந்த இழப்பு புரட்டிப்போட்டுவிடும்.

அப்படித்தான், வங்கதேசத்தை சேர்ந்த 12 வயதேயான ரோத்னா அக்தர் எனும் பிஞ்சு சிறுமியின் வாழ்க்கையும் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. தந்தையை இழந்த ரோத்னா, தன் தாயின் சிரமங்களை போக்க அவருடன் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வருகிறார். 6 வயதிருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார்.

”முதல் நாள் நான் கல் உடைக்க சென்றபோது என் அம்மா என்னை அணைத்துக்கொண்டு கதறி அழுதார். அந்த வேலை செய்ய என்னை அழைத்துப்போக அவர் விரும்பவில்லை. என்னையும், என் தம்பியையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என என்னுடைய அப்பா எப்போதும் விரும்புவார்.”, என்கிறாள் ரோத்னா.

இந்த வயதில் அவள் தாங்க இயலாத உடல், மன வலிகளை சுமந்து வருகிறாள். “ஆரம்பத்தில் 30 செங்கல்களைத்தான் உடைக்க முடியும். அதனால், எனக்கு 30 டாகா தான் (Taka – Currency of Bangladesh) கிடைக்கும். இப்போது 125 செங்கற்கள் உடைக்கிறேன். அதனால், 125 டாகா கிடைக்கிறது. அந்த வருமானத்தில், என்னுடைய தம்பியின் படிப்பு செலவை கவனிக்கிறேன். அவன் நன்றாக படிக்கிறான். இந்தாண்டு வகுப்பிலேயே இரண்டாவது மாணவராக வந்துள்ளான்”, என தன் கஷ்ட நிலையிலும் தம்பியை நினைத்து சந்தோஷமடைகிறாள் ரோத்னா.

கடந்த சில மாதங்களாக தன் தம்பிக்கு சைக்கிள் வாங்குவதற்காக அதிக நேரம் உழைக்கிறாள் இந்த அன்பு அக்கா. “கடந்த 6 மாதங்களாக இன்னும் கூடுதல் நேரம் வேலை செய்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, என் தம்பிக்கு சைக்கிள் வாங்கினேன். அதனால், அவன் வகுப்புக்கு சைக்கிளில் எளிதாக செல்லலாம்.”, எனும் ரோத்னாவின் தம்பி, தான் வேலைக்கு சென்றவுடன் ரோத்னாவை வேலைக்கு அனுப்ப மாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ளான்.

×Close
×Close