viral video of newborn elephant calf : ஆசிய யானைகளின் கர்ப்ப காலம் என்பது 18 முதல் 22 மாதங்கள் ஆகும். மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் யானைகள் இந்தியாவில் இருக்கின்றன. எனவே இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு யானையும் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காகும். இல்லையென்றால் விரைவில் யானைகள் இந்த மண்ணில் இருந்து காணாமல் போகும். மிக நீண்ட கர்ப்பகாலம் என்பதால் பிறந்த யானைகளை பாதுகாக்கும் பொறுப்பை யானைக் கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகள் பார்த்து வரும். யானைக் கூட்டத்தில் முதலில் மூத்த பெண் யானை வர, அதற்கு பின்னால் சமீபத்தில் பிறந்த குட்டிகளும் அதனை ஈண்ட தாய் யானைகளும் வரும். இந்த குட்டிக்கு பாதுகாப்பு தரும் வகையில் இதர பெண் யானைகளும், சப்-அடல்ட் வகை பெண் யானைகளும் கூட்டத்தில் இருக்கும்.
இது ஆசிய யானைகளுக்கு மட்டுமின்றி ஆப்பிரிக்க யானைகளுக்கும் இருக்கும் பொதுவான பண்புகள் ஆகும். பல நேரங்களில் இந்த பண்புகள் குறித்து நாம் வாய்வழிக் கதைகளை கேட்டிருப்போம். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்த பண்புகளை நிரூபித்துள்ளது.
1.52 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை காரில் அமர்ந்தபடி சில பெண்கள் எடுத்துள்ளனர். இதுவரை இந்த வீடியோவை 8.8 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். முதலில் மூன்று பெரிய யானைகளும், ஒரு இளம் வயது யானையும், ஒரு குட்டியானையும் ரோட்டில் நடந்து வந்தன. சிறிது நேரத்தில் காட்டின் வலது புறத்தில் இருந்து தன்னுடைய குட்டியுடன் மேலும் ஒரு யானை நடந்து வந்தது. கிட்டத்தட்ட பெரிதும் சிறிதுமாக 6 யானைகள் கம்பீரமாக குட்டியானைக்கு பாதுகாப்பாய் அரண் அமைத்து நடந்து வர பிரம்மிப்பை தருகிறது இந்த வீடியோ.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil