’ஆண்கள் யாரும் குழந்தைகளை திருமணம் செய்ய மாட்டார்கள்”: குழந்தை திருமணங்களை ஒழிப்போம்

குழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக யுனிசெஃப் அமைப்பு இரண்டு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டது. நாம் அனைவரும் குழந்தை திருமணங்களை ஒழிக்க உறுதிகொள்வோம்.

தொழில்நுட்பம், அறிவியல், இணையத்தளம் என எல்லாவற்றிலும் நம் சமூகம் முன்னேறிக் கொண்டிருப்பதாக நினைத்தாலும், இன்றளவும் குழந்தைத் திருமணங்கள் என்ற சமூக அவலங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஆக்‌ஷன் எய்ட் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில், உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீத திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பங்களாதேஷில் 43 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். குழந்தை திருமணங்களில் பங்களாதேஷ் நான்காவது இடம் வகிக்கிறது. 2041-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக ஒழிக்க அந்நாட்டு அரசாங்கம் உறுதிகொண்டுள்ளது. அதற்காக பல முன்மாதிரியான செயல்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, யுனிசெஃப் அமைப்பானது பங்களாதேஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து குழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ‘Raise the Beat’ என்ற பெயரில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு கனடா அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ஆகியவை துணை நிற்கிறது.

அதற்காக, குழந்தை திருமணங்களை ஒழிக்கும் விதமாக யுனிசெஃப் அமைப்பு இரண்டு வீடியோக்களை வெளியிட்டது.

அதில், ஒரு வீடியோவில், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்ய ஆண் ஒருவர் மறுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு வீடியோவில், 18 வயது நிறைவடையாத தன் மகளை திருமணத்திற்காக பள்ளியிலிருந்து அழைத்து செல்வதுபோலவும், அதனை எதிர்த்து பள்ளியில் உள்ள மற்ற சிறுமிகள், பணியாளர்கள் எதிர்த்து நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இரண்டு வீடியோக்களி முடிவிலும், குழந்தை திருமணங்களுக்கு எதிராக நாம் அனைவருமே குரல் எழுப்ப வேண்டும் என திரையில் காண்பிக்கப்படுகிறது. குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், உள்ளூர் அதிகாரிகள், 109 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் காண்பிக்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close