விமானத்தில் பயணிக்கும்போது பயணிகளின் உடைமைகளை முழுமையாக தாழிடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படுவதால், அவை பாதுகாப்பானதாக இருப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ, விமானங்களில் பயணிகளின் உடைமைகளுக்கு முழு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழ செய்கிறது.
விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திறந்து, விமான ஊழியர் ஒருவர் எல்லாவற்றையும் ’சோதனையிடும்’ இரண்டு வீடியோக்களை பிரேன் சிங் வெளியிட்டிருக்கிறார். பயணிகளின் உடைமைகளை சோதனையிடுவது அவருடைய கடமையா? அல்லது அதிலிருந்து பொருட்களை திருடுவதற்காக அப்படி சோதனையிட்டாரா என்பது தெரியவில்லை.
“விமானத்தில் நம்முடைய உடைமைகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா? அல்லது இல்லையா?”, என பதிவிட்டு, இந்த வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார் பிரேன் சிங். ஆனால், எந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் இச்சம்பவம் நடைபெற்றது? இந்த வீடியோவுக்கான ஆதாரம் என்ன? என்பதுகுறித்து வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால், ஏற்கனவே சோதனையிடப்பட்டு ஏற்றப்பட்டிருக்கும் உடைமைகள், ஏன் திறந்திருக்கின்றன என்பது அதிசயமாக உள்ளது.