2016-2017-ம் ஆண்டிற்கான இரண்டாம் தொகுதி பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், "முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், 6.75 முதல் 7.5 சதவீதம் வரை வளர்ச்சி விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜி.டி.பி.,உள்ளிட்ட பல்வேறு பொருளாதார காரணிகள் காரணமாக, முதல் காலாண்டில் இருந்தே வேகம் குறைந்தன. மூன்றாவது காலாண்டில் இது மேலும் சரிந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, விவசாயிகளுக்கான கடன் ரத்து, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட சவால்கள் போன்றவற்றால், எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை. வாராக்கடன்கள் பிரச்னையாலும், வளர்ச்சி அதிகரிக்கவில்லை.
இது போன்ற காரணங்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 6.75 முதல், 7.5 சதவீதம் வரை பெறுவது கடினம் தான். அதே நேரத்தில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், பணத் தட்டுப்பாட்டை குறைப்பது, வாராக் கடன் பிரச்னையில் சீர்திருத்தம் போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஈடுபட வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், சரக்கு நடமாட்டத்தில் இருந்த தடைகள் தவிர்க்கப்படுவதும் சாதகமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.