மத்திய அமைச்சரவைக் கூட்டதில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், படி வழங்குவது தொடர்பான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவன பங்குகள் விற்பனை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, படி வழங்குவது தொடர்பான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் சுமார் 34 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட விதிகள் வருகிற 01.07.2017 முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதன் மூலம் ஊழியர்கள் சுமார் 47 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவின், அடிப்படை ஊதிய உயர்வு, பென்ஷன் உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது. எனினும், படிகள் வழங்குவது தொடர்பாக அக்குழுவினர் அளித்த பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய நிதித்துறை செயலர் அசோக் லவசா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு பின்னர் இக்குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, படிகள் தொடர்பாக மறு ஆய்வினை தொடங்கிய அக்குழு, செலவினங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு தங்களது அறிக்கையை அனுப்பி வைத்தது. பின்னர், மத்திய அமைச்சரவைக்கு தங்களது அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில், படி வழங்குவது தொடர்பான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வீட்டு வாடகை படி திருத்தமே அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. தற்போதுள்ள நடைமுறைப்படி, எக்ஸ், ஒய், இசெட் ஆகிய மாநகரங்கள் மற்றும் நகரங்கள் முறையே, வீட்டு வாடகை படியானது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதமாக உள்ளது.