உலகின் பெரும் பணக்காரர் வாரன் பஃபெட்டின் நீண்ட கால நண்பரும் பெர்க்ஸையர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத்தலைவருமான சார்லி மங்கர் நேற்று காலமானார். அவருக்கு வயது 99. 1924ஆம் ஆண்டு பிறந்த சார்லி மங்கர் வரவிருக்கும் 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுடன் 100 வயதை எட்ட இருந்தார்.
அமெரிக்காவில் ஒமேகா மாகாணத்தில் பிறந்த சார்லி மங்கர் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணிதமும் படித்தவர்.
இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்துள்ளார். பிறகு ரியல் எஸ்டேட் துறையில் சட்ட நிபுணராக நீண்ட காலம் பணியாற்றிய சார்லி மங்கர், 1978ஆம் ஆண்டு வாரன் பஃபெட்டின் பெர்க்ஸையர் ஹாத்வே நிறுவனத்தில் இணைந்தார்.
அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மங்கர் பெரும் பங்காற்றினார். வாரன் பஃபெட்டுக்கும் சார்லி மங்கருக்கும் இடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருந்து வந்தது.
முதலீட்டு உலகில் வாரன் பஃபெட்டுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் சார்லி மங்கருக்கும் அதே அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகள் பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியுள்ளது.
சார்லி மங்கர் குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் நம்மிடம் பகிர்ந்து கொள்கையில், ”மங்கரிடம் மிகவும் பிடித்தது அவரிடம் இருந்த பணிவு மற்றும் எளிமைதான். மங்கரைவிட வாரன் பஃபெட் எல்லோராலும் அறியப்பட்டாலும் பஃபெட்டுக்கு நிகரான பங்களிப்பை செய்தவர் மங்கர். ஆனால் தன்னை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளாதவர். அந்த பணிவு முதலீட்டு பயணத்துக்கு மிகவும் முக்கியமானது.
அதுமட்டுமல்லாமல் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டும் இருந்தார். சார்லி மங்கர் எழுதிய` Poor Charlie's Almanack’ என்ற புத்தகத்தில் முதலீட்டையும், வாழ்க்கையையும் மனித உளவியலையும் தொடர்புபடுத்தியிருப்பார். பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
ஒரு முதலீட்டாளருக்கு பொறுமை மிக அவசியம். தற்போதுள்ள முதலீட்டாளர்கள் சார்லி மங்கரிடமும் வாரன் பஃபெட்டிடமும் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தினுடைய பங்கில் முதலீடு செய்துவிட்டு ஆறு மாதம், ஒரு ஆண்டு கூட காத்திருக்க பொறுமையில்லாமல் இருக்கிறார்கள்.
ஆனால், மங்கர் 30 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். அந்தளவுக்கு பஃபெட்டிடமும் மங்கரிடமும் பொறுமை இருந்தது. இந்த பொறுமையை இன்றைய இளம் முதலீட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
எளிமையாக இருந்தே புகழ் பெறலாம், பணக்காரராக இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் சார்லி மங்கர்” என்று வ.நாகப்பன் கூறினார்.
சார்லி மங்கர் குறித்து முதலீட்டு ஆலோசகர் ஷ்யாம் சேகர் கூறுகையில், சார்லி மங்கர் தனது ஊரிலேயே இருந்துகொண்டு தனக்கென தனி முதலீட்டு பயணத்தை அமைத்துக் கொண்டவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக முதலீட்டு பயணத்தில் சிறப்பாக செயல்பட்டவர். தவறுகளை கண்டு அஞ்சாமல் அதை எப்படி சரி செய்யமுடியும் என்று செயல்பட்டவர்.
ஏனென்றால் இன்றைய முதலீட்டு சூழலில் நாம் எடுக்கும் எல்லா முதலீட்டு முடிவுகளும் சரி என்று நினைக்கும் பழக்கம் இருக்கிறது. அவர்கள், தங்களை சரியானவர் என்று காண்பிக்கும் போக்கு இருக்கிறது. ஆனால், மங்கர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டவர்.
முதலீட்டுக்கே தொடர்பு இல்லாத அல்லது அவசியம் இல்லாத விஷயங்கள் மூலம் முதலீட்டுக்கான ஐடியாவை எடுத்திருக்கிறார். பிறகு அந்த விஷயம் எப்படி முதலீட்டு சூழலை பாதிக்கிறது என்பதை ஆராய்ந்து முதலீட்டுக்கான கருப்பொருளை எடுத்திருக்கிறார். இதுதான் மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து சார்லி மங்கரை வேறுபடுத்தி காட்டுகிறது. கடினமானவற்றை எளிமைப்படுத்தி பார்ப்பது, அதை மற்றவர்களுக்கு எளிமையாக சொல்வது போன்றவை அவருடைய மிகப்பெரிய சிறப்பு.
மங்கர் தன்னுடைய 31-ம் வயதில் மனைவியை பிரிந்தது உட்பட தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து இருந்தாலும், அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு நிறைவான வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார். என்னைப் பொறுத்தவரை சார்லி மங்கரின் வாழ்வு நிறைவானது. முதலீட்டு உலகுக்கு ஏராளமான விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.