அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட 103 பக்க அறிக்கையின் விளைவாக அதானி குழுமத்தின் பங்கு 18% வரை சரிந்துள்ளன.
புதன்கிழமை காணப்பட்ட விற்பனையைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 3% க்கும் அதிகமாக சரிந்து ரூ. 3,282 ஆக காணப்பட்டது. அதானி போர்ட்ஸ் 4 சதவீதம் சரிந்தது.
தொடர்ந்து, அதானி பவர் 5% லோயர் சர்க்யூட்டை எட்டியது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் பிஎஸ்இயில் 15% சரிந்து ரூ.2,120 ஆகவும், அதானி கிரீன் எனர்ஜி 11% சரிந்தன, அதானி டோட்டல் கேஸ் 18% சரிந்தது, அதானி வில்மர் பங்குகளும் 5% சரிந்தன.
இதற்கிடையில், அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆதாரமற்றது என்றும், அது தனது பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களை மோசமாக பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சிக்கு எதிரான தீர்வு மற்றும் சட்ட நடவடிக்கைக்கு யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஹிண்டன்பர்க் நிர்வாகத்தினர், “நாங்கள் அதனை வரவேற்போம். எங்களுக்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் தகுதியற்றதாக இருக்கும் என்று நம்புகிறோம். எங்கள் அறிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/