மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குனால் ஷா மற்றும் சந்தீப் டாண்டன் ஆகிய இருவரால் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறியளவில் தொடங்கப்பட்ட ஃபிரீசார்ஜ் நிறுவனம், பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி கண்டு இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமாக உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறை மக்களிடையே அதிகரித்துள்ளது எனலாம். பலரும், 50 ரூபாயைக் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மேற்கொள்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, ஃபிரீசார்ஜ் மொபைல் வாலட் நிறுவனத்தை, பிரபல ஸ்னாப்டீல் நிறுவனத்திடமிருந்து 385 கோடி ரூபாய்க்கு (60.04 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கையகப்படுத்த உள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஃபிரீசார்ஜ் நிறுவனத்தை ஸ்னாப்டீல் நிறுவனம் 2800 கோடி (400 மில்லியன் டாலர்கள்) ரூபாய்க்கு வாங்கியது. இந்தியாவிலேயே அதிக விலைக்கு கைமாறிய ஈ-காமர்ஸ் நிறுவனம் என்று அப்போதைக்கு இது பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படி 2,800 கோடி ருபாய் விலைக்கு வாங்கிய ஃபிரீசார்ஜ் நிறுவனத்தை சொற்ப விலையான ரூ.385 கோடிக்கு ஸ்னாப்டீல் நிறுவனம் விற்பனை செய்திருப்பது இந்திய வணிகச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிரீசார்ஜ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் தற்போது 80 கோடி ரூபாயாக உள்ளது. ஃபிரீசார்ஜ் நிறுவனத்தை கையகப்படுத்துவதால், அந்நிறுவனத்தின் 52 மில்லியன் மொபைல் வாலட் வாடிக்கையாளர்களை பெற்று ஆக்ஸிஸ் வங்கி பலன் பெறும். ஃபிரீசார்ஜ் நிறுவனத்தில் 150 - 200 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக, ஃபிரீசார்ஜ் நிறுவனத்தை பேடிஎம் நிறுவனம் வாங்க முயற்சி செய்தது. ஆனால், ஆக்சிஸ் வங்கி அதைவிட அதிக விலைக் கொடுக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.