ஜிஎஸ்டி-க்கு பிந்தைய நிகழ்வாக நுகர்வோர் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள சம்பவம் வாடிக்கையாளர்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததும் பாஜக-வினர் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுக விழா நிகழ்ச்சியை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஜிஎஸ்டி மூலம் 5, 12, 18 சதவீதம் என தொடங்கி அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதங்கள் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். அந்த வகையில், 22 - 24 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டு வந்த நுகர்வோர் பொருட்கள், 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தலைக்கு தேய்க்கும் எண்ணெய், டூத்பேஸ்ட், சோப் ஆகிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 81 சதவீத பொருட்கள், 18 சதவீத ஜிஎஸ்டி வரி அல்லது அதற்கு குறைவான ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், ஜிஎஸ்டி அமலுக்கு முன்னர் வைக்கப்பட்ட பழைய ஸ்டாக் உள்ளிட்டவைகள் காரணமாக இந்த பொருட்களின் விலையில் சிறிய இறக்கங்கள் காணப்பட்டன. ஆனால், பெரிய மாற்றம் ஏதும் விலைகளில் நிகழவில்லை. தற்போது, பழைய ஸ்டாக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில், நுகர்வோர் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் சந்தையின் ஜாம்பவான்களான ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி போன்றவை சோப், ஷாம்பூ, டிட்டர்ஜென்ட், பிஸ்கட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான விலையை குறைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, முன்னர் ரூ.29-க்கு விற்கப்பட்ட சர்ஃப் எக்ஸல் பாரின் விலை ரூ.27-க்கு தற்போது விற்கப்படுகிறது. நான்கு லைஃப்பாய் ஆக்டிவ் சில்வர் சோப்பின் விலை முன்னர் ரூ.104-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.94-க்கு விற்கப்படுகிறது.
இதனால், பிக் பஜார், ஹைப்பர்சிட்டி போன்ற சில்லறை பொருட்கள் விற்பனை நிலையங்களில் 3-8 சதவீதம் வரை விலைகளில் இறக்கங்கள் காணப்படுகின்றன. பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான யுனிபிக்-கும் விலையை 10-20 சதவீதம் குறைத்துள்ளது.
அதேசமயம், இந்த விலை குறைப்பு விற்பனையையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து குரூஃபர்ஸ் தலைமை செயல் அதிகாரி அல்பிந்தர் கூறுகையில், "ஜிஎஸ்டி-க்கு முன்னர் 15 சதவீதம் அதிகரித்த ஆன்லைன் மாதாந்திர விற்பனை, தற்போது 23 சதவீதமாக கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.