மக்களவையின் 2023-24ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்.1) ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
முன்னதாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது கன்னி பேச்சை தொடங்கி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரானது இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு பிப்.14ஆம் தேதி வரையும், அடுத்த அமர்வு மார்ச் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரையும் நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் திங்கள்கிழமை (ஜன.30) நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 27 கட்சிகள் கலந்து கொண்டன.
இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடு முழுவதும், சாதி அடிப்படையிலான பொருளாதாரக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜெகன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமர்வுகள் நடைபெற உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/