/indian-express-tamil/media/media_files/2025/10/02/chennai-startup-fragaria-2025-10-02-12-49-51.jpg)
சென்னையைத் தளமாகக் கொண்ட 'ஃப்ரேகரியா' (Fragaria) என்ற விரைந்து வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனம், தனது தலைமையகத்தை திடீரென பெங்களூருவுக்கு மாற்றியிருக்கும் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் ஹரீஷ் வரதராஜன் தனது சமூக ஊடகப் பதிவில், சென்னையில் இருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்வுபூர்வமாக விளக்கினார்.
அவர் குறிப்பிட்ட முக்கியக் காரணங்கள்:
சாதகமான காலநிலை (Climate)
சந்தை அணுகல் (Market Access)
வேளாண் சட்டங்கள் (Supportive Agriculture Laws)
ஏற்றுமதியாளர் வாழ்வாதாரம் (Expat Livability)
பெங்களூருவின் துடிப்பான ஸ்டார்ட்அப் சூழல் (Startup Ecosystem)
"சென்னையில், எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம்; அனைத்து சவால்களுக்கும் மத்தியில் ஸ்ட்ராபெர்ரிகளைப் பயிரிட்டோம். ஆனால், நிலவும் சூழலும், பெங்களூருவின் வளர்ந்து வரும் அமைப்பும் இந்த முடிவை தவிர்க்க முடியாததாக்கி விட்டது,” என்று வரதராஜன் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
'வெப்பநிலை' வாதம் எடுபடுமா?
வரதராஜன் தலைமையக மாற்றத்திற்குக் காரணமாகக் குறிப்பிட்ட 'காலநிலை' என்ற வாதம், சென்னையின் வசிப்பாளர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் உடனடியாகக் கடும் எதிர்ப்பைப் பெற்றது.
"சென்னையில் ஏப்ரல், மே மாதங்களைத் தவிர, மற்ற நேரங்களில் கடல் காற்று காரணமாகக் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. காலநிலை ஒரு காரணம் அல்ல." என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
ஒரு பயனர், "சென்னையிடம் திறமையும், உள்கட்டமைப்பும் ஏற்கனவே இருக்கிறது. பெங்களூருவுக்கு நிறுவனங்களை இழப்பதற்குப் பதிலாக, இங்கு சிறந்த ஸ்டார்ட்அப் ஆதரவை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று ஆதங்கப்பட்டார்.
பலன் அண்டை மாநிலத்துக்கா?
இந்த நிறுவன வெளியேற்றம் ஒரு பொதுவான போக்கின் ஒரு பகுதியாக இருப்பதாகப் பலரும் விரக்தியடைந்தனர்.
"மீண்டும் ஒரு சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் பெங்களூருவுக்குப் போகிறது. நாம் கல்வித்துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறோம். ஆனால், அதன் பலனைப் பெங்களூரு அறுவடை செய்கிறது," என்று ஒரு தொழில் வல்லுநர் தனது கவலையைப் பதிவு செய்தார்.
மற்றொரு பயனர், "தலைவர்கள் கனவுலகில் வாழாமல், சென்னையின் பாதகங்களைக் கவனிக்க வேண்டும். பெங்களூருவின் டிராஃபிக் மற்றும் சலிப்பான வாழ்க்கை முறை இருந்தாலும், அதுவே வெற்றியடைகிறது. அதிக ஊதியம் தரும் ஸ்டார்ட்அப்கள் வெளியேறுகின்றன, இளம் திறமையாளர்கள் வெளியேறுகிறார்கள்," என்று கொள்கை ரீதியான சவால்களைச் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத் தீர்வு உண்டா? கோவைக்கு மாறலாமா?
வெப்பநிலை குறித்த புகார்களைக் குறைக்க, தமிழ்நாட்டிற்குள் மாற்று நகரங்களை நோக்கி நகரலாம் என்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
"காலநிலை பற்றிய இந்தக் குற்றச்சாட்டுகளைத் தடுக்க, தலைநகரை கோவைக்கு மாற்றலாமே? கடந்த ஐந்து ஆண்டுகளில் புனேவின் வளர்ச்சியைப் பாருங்கள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் உள்ள கோவைக்கும் இதே போன்ற ஆற்றல் உள்ளது," என்று ஒரு கருத்து விவாதிக்கப்பட்டது.
விவாதங்கள் சூடுபிடித்தாலும், ஃப்ரேகரியா நிறுவனர் வரதராஜன், "சென்னை எப்போதும் எங்கள் முதல் வீடாக இருக்கும்," என்று உறுதி அளித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் (R&D) சென்னையிலேயே தொடர்ந்து இயங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் அதன் தலைமைச் செயல்பாட்டை வேறொரு மாநிலத்திற்கு மாற்றும்போதும், திறமையான மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்புக்காக சென்னையைத் தக்கவைத்துக் கொள்வது, தமிழகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தெளிவாக உணர்த்துகிறது. தமிழக அரசு, கொள்கை வகுப்போர் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்த விவாதத்தில் இருந்து பாடம் கற்று, தமிழகத்தின் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்த முன்வருவார்களா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.