நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது இந்த வரிவிதிப்பு முறையை எதிர்த்தாலும், ஆளுங்கட்சியான பின்னர், பாஜக-வின் நீண்ட நாள் கனவாக இருந்த இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா நாளை நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். தேவையற்ற சீரழிவை தரும் இதனை அவசர கதியில் அறிமுகம் செய்து மத்திய அரசு மிகப்பெரிய தவறிழைக்கிறது என கடுமையாக சாடிய மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜூன் 30-ம் தேதி (நாளை) நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்ட் அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஜிஎஸ்டி அறிமுக விளைவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான திமுக-வும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.