/indian-express-tamil/media/media_files/2025/10/07/epfo-minimum-pension-hike-eps-95-pension-increase-epfo-rs-2500-pension-minimum-pension-news-epfo-latest-news-2025-10-07-16-23-45.jpg)
EPFO minimum pension hike EPS 95 pension increase EPFO Rs 2500 pension Minimum pension news EPFO latest news
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT), அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ₹1,000-லிருந்து ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் உயர எதிர்பார்ப்பு
இ.பி.எஃப்.ஓ -ன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS-95) குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ₹1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-இல் நிர்ணயிக்கப்பட்டது, அதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போதைய பணவீக்கச் சூழலில் ₹1,000 என்பது மிகக் குறைவு என்று என்று ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல அமைப்புகள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், மத்திய அறங்காவலர் குழு (CBT) ஓய்வூதியத்தை 7.5 மடங்கு உயர்த்தாமல், அதற்குப் பதிலாக அதை ₹2,500 ஆக உயர்த்தவே பரிசீலிக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியக் கணக்கீடு: முழு விவரம் என்ன?
இபிஎஃப்ஓ (EPFO) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை அவசியம். ஓய்வூதியத் தொகை இந்தக் குறிப்பிட்ட சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது:
(Pension = (Pensionable Salary × Pensionable Service) ÷ 70)
இங்கு ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் என்பது, கடைசியாகப் பணிபுரிந்த 60 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகும். இதற்கு ₹15,000 உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதத்திற்கு ₹15,000 என்ற அதிகபட்ச சம்பள வரம்பில், ஒரு ஊழியர் 35 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் சுமார் ₹7,500 ஓய்வூதியமாகப் பெறலாம். இந்த உச்சவரம்பை நீக்குவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எஃப்.ஓ 3.0: முழுமையாக டிஜிட்டல் மயமாகும் கனவு!
குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு தவிர, இந்தக் கூட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ’இபிஎஃப்ஓ 3.0' திட்டம் ஆகும். இதன் கீழ், இபிஎஃப்ஓ அமைப்பை முற்றிலும் டிஜிட்டல் மற்றும் காகிதமற்ற அமைப்பாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏடிஎம் மூலம் பி.எஃப். பணத்தை நேரடியாக எடுக்கும் வசதி.
யுபிஐ வழியாக இன்ஸ்டன்ட் பி.எஃப். வித்டிராயல் வசதி.
ரியல் டைம் க்ளைம் செட்டில்மெண்ட் மற்றும் கரெக்ஷன்.
இறப்பு க்ளைம்களை எளிதாக ஆன்லைனில் தீர்ப்பது.
போன்ற பல அதிநவீன வசதிகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை நிர்வகிக்க இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ( Infosys, Wipro, TCS) போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தொழில்நுட்பச் சிக்கல்களால் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுதான் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முடிவுகள், கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதி நிலைமைக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்பதால், அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.