ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நான் இருந்திருந்தால் பண மதிப்பிழக்க நடவடிக்கையை அனுமதித்திருக்க மாட்டேன் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் பண மதிப்பிழக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நான் இருந்திருந்தால் பண மதிப்பிழக்க நடவடிக்கையை அனுமதித்திருக்க மாட்டேன் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் ரூபாய் நோட்டுகள், எந்த ஒரு சூழ்நிலையிலும் மதிப்பிழக்கம் செய்யப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது, எவ்வித நெருக்கடியான சூழலும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண மதிப்பிழக்க நடவடிக்கை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், சில நன்மைகளையும் செய்துள்ளது. அதாவது, மக்களின் சேமிப்பு, வைப்புத் தொகை, முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல், வருமான வரித் தாக்கல் செய்வதும் அதிகரித்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்டிப்படைக்கும் கருப்புப்பண பிரச்னையை சுட்டிக் காட்டியுள்ள அவர், அது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒருவேளை அதிகமான வரிச் சுமை உள்ளிட்ட பிரச்னைகள் கருப்புப்பணத்தை பதுக்குவதற்கான காரணியாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் நீண்ட கால பாதிப்பை பண மதிப்பிழக்க நடவடிக்கை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள ஜலன், 2016-17 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, நான்காவது காலண்டில் 6.1 சதவீதமாக குறைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.