மத்திய அரசின் திட்டமான தங்கப் பத்திர திட்டத்தின் கீழ், தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தங்க வைப்பு (தங்க டெபாசிட்), தங்க பத்திரம், தங்க நாணயம் ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 2015-ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் தங்கப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் விண்ணப்பம் செய்பவர்கள், 8 ஆண்டுகளுக்கு பின்னர் அன்றைய தங்கத்தின் விலைக்கு பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
குறைந்தபட்சமாக 1 கிராமில் தொடங்கி, 5 கிராம், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் ஆகிய மதிப்புகளில் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. ஒருவர், அதிகபட்சமாக, 500 கிராம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீட்டிற்கு, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி அடிப்படையில், அரையாண்டிற்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட, தங்க பத்திரங்களில், 5, 6 மற்றும் 7 ஆண்டுகளில் வெளியேறும் வசதியும் உள்ளது.
இத் திட்டத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தங்கப் பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் வருகிற 14-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் தங்கப் பத்திரங்களின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விநியோகிக்கப்பட்ட தங்கப் பத்திரங்கள் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,901-ஆக இருந்தது. இதனை ஒப்பிடும் போது தற்போதைய விலை குறைவாகும்.
மத்திய அரசு, இதற்கு முன்னர் எட்டு முறை தங்கப் பத்திரங்களை விநியோகம் செய்துள்ளது. அதன் மூலம் ரூ.5,400 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.