இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழரான சுந்தர் பிச்சை, சென்னையில் கழித்த தனது இளமைக்கால அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுந்தர் பிச்சை:
சுந்தர் பிச்சை.. இந்த பெயரை தெரியாத தமிழர்களே இருக்க மாட்டார்கள். தமிழனாய் பிறந்து மென்பொருள் துறையில் தனக்கிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் நவீன உலகின் தவிர்க்க முடியாத கூகுள் நிறுவனத்தின் உயரிய பொறுப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சையின் வயது 46.
படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் சுந்தர் பிச்சைக்கு ஆர்வம் அதிகம். பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியதும் அவர் தான். இப்படி இவர் குறித்த ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில், செய்தித்தாள்களில், நூல்களில் வெளிவந்தன.
ஆனால், உண்மையில் அவரின் பள்ளிக்காலம், இளமைக்காலம் எப்படி இருந்தன? என்பது அவரைத்தவிர வேற யாருக்கு நன்கு தெரிந்திருக்கும். சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த நாட்கள் எப்படியானவை? இதற்கு சுந்தர் பிச்சையே தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
இதோ அவரின் மலரும் நினைவுகள்:
”சென்னையில் நான் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் எளிமையானது. 2 அறைகள் கொண்ட சாதாரண வீட்டில் தான் பெற்றோருடன் இருந்தேன். அப்போது எல்லோர் வீட்டிலும் இருப்பது போன்ற டிவி, ஃப்ரிட்ஜ் ஆகியவை எங்கள் வீட்டில் இல்லை. ஆனால் இப்போது நான் வாழும் வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டு பார்த்தால் வாடகை வீட்டில் நான் வாழ்ந்த நாட்கள் அழகானவை, இனிமையானவை.
இப்போது என்னை எல்லோரும் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ வாக தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் எளிமையை விரும்பும் மனிதன். எளிமையாக தான் வாழ்ந்தேன்.. வளர்ந்தேன். ஆடம்பரமான பெட், கட்டில் எல்லால் கிடையாது.
தரையில் தான் படுத்து உறங்குவேன். கடும் அச்சத்தை தரும் வறட்சியையெல்லாம் நாங்கள் சந்தித்துள்ளோம். அதனால் எப்போதும் தலைமாட்டில் தண்ணீர் வைத்துக் கொண்டுதான் தூங்குவோம். இப்போதும் அந்த பழக்கம் எனக்கு இருக்கிறது. என் அறையில் என் தலைமாட்டில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எப்போதும் இருக்கும்.
சிறு வயதில் எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்று கவலைப்பட்டு இருக்கிறேன். ஒருநாள் அதை நான் வாங்கியப்போது எனக்கு அதுவே மிகப்பெரிய சாதனையாக தெரிந்தது. படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்கன்ஸ் புத்தங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.
என்னுடைய மிகப்பெரிய பொழுதுப்போக்கே நண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தான். இப்படித்தான் என் இளமைக்காலம் கழிந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது.
கம்ப்யூட்டர்.. இந்த பெயரை கேட்கும் போதே எனக்கு அந்த நாள் ஞாபகங்கள் வந்து விடுகிறது. அந்த காலக்கட்டத்தில் எவன் ஒருவன் கம்ப்யூட்டரை ஈஸியாக ஆப்ரேட்டர் செய்கிறானோ அவன் தான் பெரிய ஆள். நான் படிக்கும் காலத்தில் ஏறக்குறைய நான் 4 முறை கம்ப்யூட்டரை இயக்கி இருப்பேன் அதுவே எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
1000 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சையின் இளமைக்காலம் இவ்வளவு எளிமையாக இருந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. சுந்தர் பிச்சையின் இந்த பேட்டிக்கு பிறகு இந்த வசனம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.
”வாழ்நாளில் ஒருவன் எப்படி பிறந்தான் என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்கிறான் என்பதே முக்கியம்.”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.