ஆல்பபெட் நிறுவன நிர்வாக குழுவில் சுந்தர் பிச்சை

கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.

தேடுபொறி நிறுவனமாக ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கூகுள், யூ டியூப், ஆண்ட்ராய்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களை பின் நாட்களில் வாங்கியது. அது தவிர கூகுள் நிறுவனமும் சில பொருட்களை உருவாக்கி வருகிறது. ஒயர் நிறுவனத்தின் கீழ் பல்வேறு விஷயங்களை செய்ய முடியாது என்பதால் புதிதாக தாய் நிறுவனம் ஒன்றை உருவாக்க கூகுள் திட்டமிட்டது. அதன்படி, ஆல்பபெட் எனும் தாய் நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் கீழ் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜும், அதன் தலைவராக மற்றொரு நிறுவனர் செர்கி பிரின் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் வழங்கப்பட்டது. சுந்தர் பிச்சை, சென்னையில் பள்ளிப்படிப்பையும், காரக்ப்பூர் ஐஐடி-யில் இளங்கலை பொறியியல் பட்டத்தையும் பெற்றவர். தொடர்ந்து, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். அவரது மேற்பார்வையின் கீழ், கூகுள் க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன. கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், தனது கடின உழைப்பால் கூகுள் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனர்களில் ஒருவருமான லாரி பேஜ் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆல்பபெட்டின் நிர்வாக குழுவில் உள்ள, நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி பிரின், முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக், க்ளைனர் பெர்கின்ஸ் ஜான் டூயர், கூகுள் எஸ்விபி டியன் கிரீன் ஆகியோருடன் சுந்தர் பிச்சையும் இணையவுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆல்பபெட் குழுவில் அவர் இணைவது எனக்கு உற்சாகமளிக்கிறது என லாரி பேஜ் புகழாரம் சூடியுள்ளார்.

×Close
×Close