நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாகியுள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் டி.வி, ஏ.சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களின் விலை இரு முறை உயர வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மூலம் அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், பொருட்களின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. நம் வாழ்வோடு ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பெரும்பாலானவை 28 சதவீத வரி விதிப்பிற்குள் வருவதால் அவற்றின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த புதிய வரி முறையால், டி.வி, ஏ.சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களின் விலை நடப்பாண்டில் இரு முறை உயர வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்டுள்ள கூடுதல் வரிச்சுமையை சமாளிக்க வீடியோகான், பானாசோனிக், எல்.ஜி., வேர்ல்பூல், ஆகிய நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்த பரிசீலனை செய்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே, எஃகு, தாமிரம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலையில் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஏசி மற்றும் பிரிட்ஜ் கம்ப்ரசர்களின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், டிவி பேனல்களின் விலை 3 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன. கடந்த சில மாதங்களாக காணப்பட்ட மூலப் பொருட்களின் இந்த விலை உயர்வு, பண்டிகை காலத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
விளிம்பு நிலை அழுத்தம் காரணமாக, விலை ஏற்றத்தை பண்டிகை காலம் வரை நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன என சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) ராஜீவ் பூட்டானி தெரிவித்துள்ளார்.
அதேபோல், வேர்ல்பூல் இந்தியா துணைத் தலைவர் கபில் அகர்வால் கூறுகையில், ஜிஎஸ்டி-யின் அடிப்படையில் விலை உயர்வு குறித்து நாங்கள் இன்னமும் முடிவெடுக்கவில்லை. எஃகு, தாமிரம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட்டு வருகிறோம். வருகிற மாதங்களில் அதிகரிப்பு இருக்கும் என்றார்.
ஜிஎஸ்டி-யால் டி.வி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் ஆகியவற்றின் விலை 3 முதல் 4 சதவீதம் உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என பானாசோனிக் தலைமை நிதி அதிகாரி மனீஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி-யால் ஏற்படும் கூடுதல் வரிச்சுமை குறித்து உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், விலைகளை இருமுறை ஏற்ற சிலர் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது 2.5 சதவீதம் விலையை ஏற்றவும், பின் வரும் நாட்களில் மீண்டும் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட சதவீதம் விலையை ஏற்றவும் வீடியோகான் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்த காலகட்டங்களில் விலை ஏற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. தற்போது கூடுதல் வரி செலுத்தி வருகிறோம். விலை ஏற்றத்துக்கு பண்டிகை காலம் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என நுகர்வோர் சாதனங்கள் தயாரிக்கும் ஏனைய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.