/indian-express-tamil/media/media_files/2025/10/07/health-insurance-choose-right-health-policy-2025-10-07-15-54-35.jpg)
Health insurance Choose right health policy Network hospitals list First time health insurance buyer
ஒரே ஒரு மருத்துவ அவசரம் உங்கள் பல வருட சேமிப்பைத் துடைத்துவிடும். கடன் வலையில் சிக்க வைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால்தான், இன்றைய சூழலில் சுகாதார காப்பீடு (Health Insurance) என்பது ஆடம்பரம் அல்ல, அத்தியாவசியம்! ஆனால், ஏகப்பட்ட திட்டங்கள் சந்தையில் இருக்கும்போது, எந்த பாலிசியைத் தேர்ந்தெடுப்பது, எந்த நிறுவனத்தை நம்புவது? என்பது முதல்முறை காப்பீடு வாங்குவோருக்குப் பெரிய குழப்பமாக இருக்கலாம்.
பாலிசி வாங்கிய பின், "அய்யோ, இதை கவனிக்கவில்லையே!" என வருத்தப்படாமல் இருக்க, சரியான பாலிசியை (Policy) தேர்ந்தெடுக்க நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (CSR):
தி எகானாமிக் டைம்ஸ் இதழில் வெளியான இந்த செய்தியின் படி, நீங்கள் பாலிசி வாங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிய, முதலில் அதன் "க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தைப்" (Claim Settlement Ratio - CSR) பார்க்க வேண்டும். இது, ஒரு நிறுவனம் தங்களிடம் வந்த மொத்த கோரிக்கைகளில் எத்தனை சதவீதத்தை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது என்பதைக் குறிக்கும்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் சிஎஸ்ஆர் (CSR) 95% என்றால், அது தனக்கு வந்த 100 க்ளைம் கோரிக்கைகளில் 95-ஐ வெற்றிகரமாக செட்டில் செய்துள்ளது என்று அர்த்தம். IRDAI அறிக்கையின்படி, 90% மற்றும் அதற்கு மேல் உள்ள விகிதங்கள் கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது. Acko, HDFC ERGO, ICICI Lombard போன்ற பல முன்னணி நிறுவனங்கள் 95%க்கும் அதிகமாகவே செட்டில்மென்ட் விகிதம் வைத்துள்ளன.
2. செலவிடப்பட்ட க்ளைம் விகிதம் (ICR):
இன்சுர்ட் க்ளேம் ரேஷியோ (Incurred Claim Ratio- ICR) என்பது, நிறுவனம் வசூலித்த மொத்த பிரீமியத் தொகையில், எவ்வளவு தொகையைக் க்ளைம்களுக்காகச் செலவிட்டது என்பதைக் குறிக்கும்.
ஒரு நிறுவனம் ₹10 லட்சம் பிரீமியம் வசூலித்து, ₹8.5 லட்சம் க்ளைம் தொகையாகக் கொடுத்தால், அதன் ஐசிஆர் (ICR) 85% ஆகும். காப்பீட்டுத் துறையின் வல்லுநர்கள், ஒரு நிறுவனத்தின் ஐசிஆர் விகிதம் 70% முதல் 90% வரை இருப்பது சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். இது, நிறுவனம் நிதிநிலையில் ஸ்திரமாகவும், அதே சமயம் க்ளைம்களை மறுக்காமலும் இருப்பதைக் காட்டுகிறது.
3. ரூம் வாடகை உச்சவரம்பைக் கவனியுங்கள்!
பாலிசி ஆவணத்தில் இருக்கும் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, நீங்கள் மருத்துவமனையில் தங்கும் "அறை வாடகை உச்சவரம்பு" (Room Rent Limit).
உங்கள் பாலிசியில் ரூம் வாடகைக்கு உச்சவரம்பு இருந்தால், நீங்கள் அதைவிட அதிக வாடகை உள்ள அறையைத் தேர்வு செய்தால், அறை வாடகை மட்டுமின்றி, மருத்துவர் கட்டணம், நர்சிங் கட்டணங்கள் போன்ற இதர செலவுகளிலும் விகிதாசார கழிவு (Proportionate Deduction) விதிக்கப்படும்.
உதாரணமாக, உங்கள் பாப்பீசியில் ₹5,000 ரூம் ரென்ட் கேப் உள்ளது; நீங்கள் ₹10,000 அறை எடுத்தால், உங்கள் மொத்த பில்லில் 50% மட்டுமே காப்பீட்டு நிறுவனம் செலுத்தும். எனவே, உச்சவரம்பு இல்லாத பாலிசியைத் தேர்ந்தெடுப்பது உங்கள் சொந்தச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.
4. காத்திருப்பு காலம் (Waiting Period) என்ன?
ஏற்கெனவே இருக்கும் நோய்கள் (Pre-Existing Diseases - PED) மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குக் காப்பீடு கிடைப்பதற்குக் காப்பீட்டு நிறுவனங்கள் விதிக்கும் காலவரம்புதான் காத்திருப்பு காலம். இது பொதுவாக 1 முதல் 4 ஆண்டுகள் வரை மாறுபடும். அதேபோல, முதல்முறை பாலிசி எடுத்தவுடன் விபத்து தவிர மற்ற எல்லாச் செலவுகளுக்கும் 30 நாட்கள் ஆரம்பக் காத்திருப்பு காலம் இருக்கும். குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
5. கோ-பேமென்ட் (Co-payment) & கழிவுகள் (Deductibles) இருக்கிறதா?
கோ-பேமென்ட்: க்ளைம் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை (எ.கா: 20%) பாலிசிதாரர் செலுத்த வேண்டும். இது மொத்த க்ளைம் தொகையையும் அதிகரிக்கும்.
கழிக்கக்கூடிய தொகை (Deductible): ஒரு நிதியாண்டில் நீங்கள் க்ளைம் செய்வதற்கு முன், ஒரு நிலையான தொகையை (எ.கா: ₹50,000) நீங்களே முதலில் செலுத்த வேண்டும்.
பிரீமியத்தைக் குறைக்க இவை உதவலாம் என்றாலும், க்ளைம் செய்யும் சமயத்தில் உங்கள் சொந்தச் செலவைக் கூட்டும் என்பதால், "கோ-பேமென்ட் இல்லாத" பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.
6. நெட்வொர்க் மருத்துவமனைகள் பட்டியல்
உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உள்ளதா என்று பாருங்கள். நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை (Cashless Facility) பெறுவது, அவசர காலத்தில் பணப் பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும்.
7. ப்ரீ மற்றும் போஸ்ட் மருத்துவமனைச் செலவுகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய (Pre-hospitalisation) (எ.கா: பரிசோதனை) மற்றும் டிஸ்சார்ஜ் ஆன பிந்தைய (Post-hospitalisation) (எ.கா: மருந்து, பிசியோதெரபி) செலவுகளைக் காப்பீடு செய்யும் கால வரம்பை (பொதுவாக 30 முதல் 180 நாட்கள்) சரிபார்க்கவும். நீண்ட காலத்திற்கான கவரேஜ் இருப்பது, உங்களது நிதிச் சுமையைக் குறைக்கும்.
சுகாதார காப்பீடு என்பது ஒரு முதலீடு. எனவே, பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும் முடிவெடுக்காமல், இந்த ஏழு காரணிகளைக் கருத்தில் கொண்டு, நிதானமாகத் தேர்ந்தெடுங்கள். உங்கள் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.