ஆர்.சந்திரன்
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய திவால் சட்டம், அதாவது Insolvancy & Bankruptcy Codeல் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பாக, அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, அதை அமலாக்க முயல்வதால், இந்த புதிய சூழல் உருவாகியுள்ளது. இதன்படி, சொந்த வீடு வாங்க நினைத்து கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் கையிருப்பு பணத்தைக் கொடுத்த நபர்கள், அல்லது வங்கிக் கடன் மூலம் பணம்பெற ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். குறித்த நேரத்தில் குடியிருப்பைப் பெற இயலாமல் அலைக்கழிக்கப்படும்போதும், இது தொடர்பாக கட்டுமான நிறுவனம் உரிய பதில் தரவோ, விளக்கம் அளிக்கவோ முன்வருவதில்லை. அந்த சூழலில் அந்த கட்டுமான நிறுவனம் மீது திவால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வழி ஏற்படும்.
கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுக்க, இதுபோன்ற பல நிறுவனங்கள் மீது புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அதிகமில்லை. பல்வேறு அரசு தரப்பை தங்களது பொருளாதார வலிமை மூலம் எளிதாக சமாளிக்கும் கட்டுமான நிறுவனங்களை எப்படி எதிர்கொள்வது என்பதே தெரியாமல் சாமானியர்கள் திண்டாடி வந்தனர்.
தற்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இனி, வீடு வாங்க முன்வந்து கட்டுமான நிறுவனத்துக்கு பணம் கொடுத்த தனிநபர், கடன் வழங்கிய நபராகக் கருதப்படுவார். அதனால், புதிய திவால் சட்டத்தின் விதிமுறைகள்படி, கட்டுமான நிறுவனத்தின் மீது திவால் நோட்டீஸ் பதிவு செய்ய தகுதி பெறுவார்கள். இதனால், தற்போதுள்ள சூழல்போல, ஆண்டு கணக்கில் பதில் இல்லாமல் திண்டாடுவது போல இல்லாமல், 6 மாதங்களுக்குள் வழக்கு கட்டாயமாக முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் அசட்டையாக இருக்க முடியாத நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
இதேபோன்றதொரு வசதியை எம்எஸ்எம்இ எனப்படும் நடுத்தர, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெரு நிறுவனங்களுக்கு தனது உற்பத்தியை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் வரவில்லை என்றால், அவையும் புதிய திவால் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.