Budget 2023 Top Income Tax expectations: நாட்டின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக முழுமையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.
இந்தப் பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை அறிவிக்க அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2023 பட்ஜெட்டில் வரி செலுத்துவோரின் நலனுக்காக சில நடவடிக்கைகள் இருக்கலாம். அந்த வகையில், வரி விதி மாற்றங்கள் தொடர்பான முதல் ஐந்து எதிர்பார்ப்புகள் பின்வருமாறு:-
- பிரிவு 80C வரம்பு மாற்றம்
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு என்பது வரி செலுத்துவோர் பெறும் பொதுவான வரி சேமிப்பு வழியாகும். இந்தப் பிரிவில் பல்வேறு மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள் வருகின்றன.
பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரம்பு 2014 முதல் திருத்தப்படவில்லை. அரசாங்கம் இந்த வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வல்லுநர்கள் இந்த வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
- அடிப்படை வரி விலக்கு வரம்பு மாற்றம்
வருமான வரிச் சட்டத்தின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று பல வரி வல்லுநர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
தற்போது, வருமான வரி விதிகளின் கீழ், அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இதனால் ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர்கள் எந்தவொரு வருமான வரியும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- உயர் பிரிவு 80D
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சுகாதார செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, சுகாதார காப்பீட்டிற்கான பிரிவு 80D விலக்கு வரம்பை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது, 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- வீட்டுக் கடன் வரிச் சலுகைகள்
வரவிருக்கும் பட்ஜெட்டில் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி செலுத்துவதற்கான வரி விலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டிச் செலுத்துதலின் மீது கோரக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு, ஒரு நிதியாண்டுக்கு ரூ. 2 லட்சம் ஆகும்.
- LTCG வரி நிவாரணம்
பட்ஜெட் 2023 மூலம் சந்தையில் சில்லறை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு முதலீட்டாளர்களுக்கு LTCG வரிச் சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று சில தொழில் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.