இன்ஃபோசிஸ்… டி.சி.எஸ்… டாடா மோட்டார்ஸ்..! மதிப்பு மிக்க நிறுவனங்களை பட்டியலிட்டது ஃபோர்ப்ஸ்

முதல் 250 நிறுவனங்களில் 59 அமெரிக்காவை சேர்ந்தவை. அடுத்தபடியாக ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 82 நிறுவனங்கள் டாப் 250-ல் இடம் பிடித்துள்ளன.

By: September 25, 2019, 1:27:52 PM

Infosys In Forbes List: இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், உலகின் 3-வது மதிப்புமிக்க நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இது கவுரவமாக கருதப்படுகிறது.

வர்த்தகம், தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சர்வதேச மீடியா நிறுவனமான ஃபோர்ப்ஸ், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியல் இட்டிருக்கிறது. உலக அளவில் முதல் இடத்தை விசா நிறுவனத்திற்கும், 2-வது இடத்தை ஃபெராரி நிறுவனத்திற்கும் ஃபோர்ப்ஸ் வழங்கியிருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்ஃபோசிஸ் 3-வது மதிப்பு மிக்க நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரசித்தி பெற்ற ஆப்பிள், சீமென்ஸ், வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, இந்த இடத்தை இன்ஃபோசிஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் பற்றிய அறிவிப்பை, ‘ஆசிய படையெடுப்பு’ என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ். இந்தப் பட்டியலில் இதர இந்திய நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) 22-வது இடத்தையும், டாடா மோட்டார்ஸ் 31-வது இடத்தையும், டாடா ஸ்டீல் 105-வது இடத்தையும், லார்சன் டாப்ரோ 115-வது இடத்தையும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 117-வது இடத்தையும், ஹெச்.டி.எஃப்.சி 135-வது இடத்தையும், பஜாஜ் ஃபின்சர்வ் 143-வது இடத்தையும்,விப்ரோ ஸ்டூட் 168-வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

டாப் 10 இடத்தில் விசா, ஃபெராரி, இன்ஃபோசிஸ் ஆகியவற்றை தவிர்த்து நெட்ஃபிளிக்ஸ், பேபால், மைக்ரோசாஃப்ட், வால்ட் டிஸ்னி, டொயோட்டா மோட்டார்ஸ், மாஸ்டர் கார்ட், காஸ்ட்கோ வேல்சேல் நிறுவனங்கள் அணி வகுக்கின்றன. கடந்த முறை வால்ட் டிஸ்னி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 250 நிறுவனங்களில் 59 அமெரிக்காவை சேர்ந்தவை. அடுத்தபடியாக ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 82 நிறுவனங்கள் டாப் 250-ல் இடம் பிடித்துள்ளன.

நிறுவனங்களின் நம்பகத் தன்மை, நேர்மை, சமூக தொடர்பு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், உற்பத்தி பொருட்களின் தரம் உள்ளிட்ட அளவுகோல் அடிப்படையில் இந்தப் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் கூறியிருக்கிறது.

உலக அளவில் 3-வது இடம் பெற்றிருக்கும் இன்ஃபோசிஸ் 1981-ல் நாராயண மூர்த்தியால் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இதன் வர்த்தகம் 11.6 பில்லியன் டாலர் ஆகும். கடந்த மார்ச் நிலவரப்படி இதன் ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 4ஆயிரத்து 107. வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 2-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராகவும் இன்ஃபோசிஸ் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Infosys in forbes list 3rd best regarded company tcs tata motors listed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X