Advertisment

25-30 வயது சம்பளதாரர்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல் என்ன? முதலீட்டு ஆலோசகர் ஷ்யாம் சேகர் விளக்கம்

25-30 வயதுக்குள் உள்ள சம்பளதாரர்கள் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் அவசர கால நிதி என மூன்றையும் அடிப்படையாக செய்திருக்க வேண்டும்.

author-image
Devaraj Periyathambi
New Update
Financial Planning day

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் உலக நிதி திட்டமிடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

"எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும் கையில் ஒரு பைசாவும் நிக்கவில்லை” என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். மாதந்தோறும் நமக்கே இந்த நிலைமை ஏற்பட்டு கொண்டிருக்கும்.
ஆனால், இந்த நிலைமை ஏன் நமக்கு ஏற்படுகிறது என்று நம்மை நாம் கேள்வி எழுப்பியிருக்க மாட்டோம். அந்தக் கேள்வி எழ ஆரம்பித்திருந்தால் நாம் நிதி திட்டமிடல் குறித்து தெரிந்து கொள்ளவும் அதை நம் வாழ்வில் பயன்படுத்தவோ தொடங்கியிருப்போம்.

Advertisment

இன்று உலக நிதி திட்டமிடல் தினம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் உலக நிதி திட்டமிடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் எவ்வாறு நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஐதாட் (ithought) நிறுவனத்தின் நிறுவனரும் முதலீட்டு ஆலோசகருமான ஷ்யாம் சேகர். 

கேள்வி : ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிதி திட்டமிடல் என்பது எவ்வளவு முக்கியம்?
ஷ்யாம் சேகர்: ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்குகளை கண்டறிவதற்கு நிதி திட்டமிடல் உதவி புரிகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெவ்வேறு வகையான இலக்குகள் இருக்கும். உதாரணமாக வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி, ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை என பல்வேறு வகையான இலக்குகள் இருக்கும்.  சில இலக்குகள் குறிப்பிட்ட காலத்தில் முடிந்து விடும் (உதாரணமாக குழந்தைகளின் கல்வி). சில இலக்குகள் நமது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த இலக்குகளை அடைவதற்கு நிதி திட்டமிடல் மிக முக்கியமானதாக இருக்கிறது. மேலும் புதிய இலக்குகளை கண்டறியவும் நிதி திட்டமிடல் உதவி புரிகிறது.

கேள்வி: ஒரு 22 வயதுள்ள தனி நபர் தனது முதல் வேலையை தொடங்குகிறார். அவருக்கு 20,000 ரூபாய் மாதச் சம்பளம் கிடைத்து வருகிறது. அவர் எப்படி தனது நிதி திட்டமிடலை மேற்கொள்ள முடியும்?. 
ஷ்யாம் சேகர்:  20,000 ரூபாய் மாதச்சம்பளம் வாங்கக்கூடிய நபர் முதலில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதையும் மாதந்தோறும் அவருக்கு அடிப்படை தேவைகளுக்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் கணக்கிட வேண்டும். உதாரணமாக, ஒருவரால் 8000 ரூபாயில் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொண்டால் அவரிடம் 12,000 ரூபாய் மீதம் இருக்கும். இந்த 12,000 ரூபாயில் தனது பெற்றோருக்கு 4,000 ரூபாய் அனுப்பிடலாம், இன்னும் 4,000 ரூபாய் எரிபொருள் செலவு மற்ற இதர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அவரிடம் மீதம் 4,000 ரூபாய் இருக்கும். இந்த தொகையை சேமிப்பாக இல்லாமல் முதலீடாக செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். 

கேள்வி: இந்த 4,000 ரூபாய் அவர் எங்கு முதலீடு செய்ய தொடங்கலாம்? 
ஷ்யாம்சேகர்: இந்த 4,000 ரூபாயில் 1000 ரூபாயை தங்கத்தில் முதலீடு செய்யலாம். 1000 ரூபாயை அவசர கால நிதிக்காக சேமித்து வைக்க வேண்டும். இதற்கு லிக்விட் மியூச்சுவல் பண்ட்-ஐ (Liquid Mutual Fund) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 2,000 ரூபாயை லார்ஜ்கேப் அல்லது பிளெக்ஸி கேப் மியூச்சுவல் பண்டுகளில் (Largecap or Flexi cap Mutual Fund) மாதந்தோறும் எஸ்.ஐ.பி முதலீடு செய்ய தொடங்கலாம்.

கேள்வி : 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்ள சம்பளதாரர்கள் கண்டிப்பாக செய்திருக்க வேண்டிய நிதி திட்டமிடல் என்னென்ன?
ஷ்யாம் சேகர்: நீங்கள் 25 வயதை எட்டிவிட்டால் உங்களுக்கு கண்டிப்பாக டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance) இருக்கவேண்டும். பிறகு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு (Health Insurance) எடுத்திருக்க வேண்டும். அப்பா, அம்மாவை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள் என்றால் அவர்களுக்கும் மருத்துவ காப்பீடு  (Health Insurance) எடுத்திருப்பது அவசியம். பிறகு எதிர்பாரா செலவுகளுக்கான நிதி அல்லது அவசர கால நிதி என்பது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக 3 மாத கால ஊதியத்தை நீங்கள் அவசர கால நிதியாக சேமித்து வைத்திருக்க வேண்டும். 25-30 வயதுக்குள் உள்ள சம்பளதாரர்கள் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance), ஹெல்த் இன்ஷூரன்ஸ் (Health Insurance) மற்றும் அவசர கால நிதி என மூன்றையும் அடிப்படையாக செய்திருக்க வேண்டும். இந்த அடிப்படைகளை பூர்த்தி செய்த பிறகு நீங்கள் ஒரு நிலையான முதலீட்டு பயணத்தை தொடங்கலாம். 
இதற்கிடையே, ஒவ்வொரு 5 ஆண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சம்பளம் உயரும் அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தொகை உயருகிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும். 40 வயது வரை பார்த்துக் கொண்டால் நல்லது. 

கேள்வி: தற்போது டிஜிட்டல் தளங்களில் (குறிப்பாக யூடியுப்) Finfluencers என்று சொல்லக்கூடிய முதலீடு தொடர்பாகவும் நிதி திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனை சொல்பவர்கள் அதிகமாகியுள்ளனர். அவர்கள் ஆலோசனையை பின்பற்றுபவர்களும் அதிகம். இது ஆரோக்கியமான போக்கா?
ஷ்யாம் சேகர்: இதுபோன்று ஆலோசனை சொல்பவர்கள் முதலில் அவர்கள் அதை கடைபிடிக்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஆலோசனை சொல்வதற்கான தகுதி(Competence) என்ன என்பதையும் அவர் எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 
முக்கியமானது என்னவென்றால், இவர்கள் சொல்வதை யார் அங்கீகரிப்பது என்ற கேள்வி எழுகிறது. செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் செபி விதிகளை பின்பற்றுபவர்கள். இவர்களிடம் பொறுப்புத்தன்மை உண்டு. ஆனால், finfluencers-களிடம் இந்த பொறுப்புத்தன்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Finance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment