முதலீடுக்கு உகந்த மாநிலமா? 6-வது இடத்திற்கு சரிந்த தமிழ்நாடு

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முதலீடுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் 6-வது இடத்தை தமிழகம் பிடித்ததே ஆறுதலான விஷயம்தான் என்கிறார்கள், தொழில்துறை வல்லுனர்கள்.

‘அமைதிப் பூங்கா’ என ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்படும் தமிழ்நாடு, முதலீடுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் சரிவை சந்தித்து வருகிறது.

ஒரு மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதில் வேலை வாய்ப்புக்கு முக்கிய பங்கு உண்டு. வேலை வாய்ப்பு வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சி தேவை! தொழில் வளர்ச்சி பெற வேண்டுமானால், முதலீட்டாளர்கள் தேடி வரக்கூடிய மாநிலமாக அது இருக்கவேண்டும்.

ஒரு மாநிலம் தொழில் முதலீடுக்கு உகந்த மாநிலமா? என்பதை 6 அளவீடுகளை அடிப்படையாக வைத்து, என்.சி.ஏ.இ.ஆர் (நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எக்கனாமிக் ரிசர்ச்) கணக்கீடு செய்கிறது. அவை வருமாறு: 1.நிலம் 2.தொழிலாளர்கள் 3.உள் கட்டமைப்பு 4.பொருளாதாரச் சூழல் 5.அரசியல் ஸ்திரத்தன்மை 6.சிறந்த நிர்வாகம் மற்றும் வணிக ஒழுங்கு.

இந்த அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த ஆண்டைப் போலவே குஜராத்தும், டெல்லியும் நடப்பு ஆண்டிலும் (2017) முறையே முதல் இரு இடங்களை தக்க வைத்துள்ளன. கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 6-வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 4-வது இடத்தில் இருந்த ஆந்திரா, ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2016-ல் 16-வது இடத்தைப் பிடித்திருந்த ஹரியானா, ஆச்சர்யப்படத்தக்க வகையில் 12 இடங்கள் முன்னேறி 4-வது இடத்திற்கு வந்திருக்கிறது.

அதேபோல புதிதாக உருவான தெலங்கானா, கடந்த ஆண்டு 13-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது இடத்திற்கு வந்துவிட்டது.

கடந்த ஆண்டு 10-வது இடத்தில் இருந்த கேரளா, 3 இடங்கள் முன்னேறி இந்த முறை தமிழகத்திற்கு அடுத்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. தமிழகத்தை சுற்றியுள்ள 3 மாநிலங்கள் முன்னேறிக்கொண்டிருக்க, காவிரியில் நம்முடன் சண்டை போடும் கர்நாடகா மட்டும் தமிழகத்தைப் போலவே பின்னுக்கு போகிறது. கடந்த முறை 6-வது இடத்தில் இருந்த கர்நாடகம், இந்த முறை 9-வது இடம்!

அதேபோல கடந்த முறை 5-வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா, இந்த முறை 8-வது இடம்! கடந்த முறை 12-வது இடத்தில் இருந்த மத்தியபிரதேசம் இந்த முறை 2 இடங்கள் முன்னேறி, 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் ஏக அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முதலீடுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் 6-வது இடத்தை தமிழகம் பிடித்ததே ஆறுதலான விஷயம்தான் என்கிறார்கள், தொழில்துறை வல்லுனர்கள்.

தொழில்துறைக்கான நிலம் மற்றும் தொழிலாளர்கள் கிடைப்பதில் உள்ள பிரச்னைகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, நிர்வாக குளறுபடிகள் ஆகியனவே தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயங்குவதற்கான காரணங்களாக பட்டியல் இடப்படுகின்றன. அதேசமயம் தொழிற்பூங்காக்கள் அமைந்திருப்பது, தொழில்நுட்ப கல்வியறிவு மிக்கவர்கள் இருப்பது, உள்மாநில உற்பத்தி பொருட்களின் சந்தை வலுவாக இருப்பது ஆகியவை காரணமாகவே இன்னமும் டாப் 10-க்குள் தமிழகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, உலக வங்கி ஆகியவை இணைந்து வர்த்தக சீரமைப்பு பணியில் சிறந்த மாநிலங்களை பட்டியலிட்டன. அதில் தமிழ்நாடு ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து 6 இடங்கள் பின்தங்கி, 18-வது இடத்திற்கு சென்றது. அதாவது, இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கடைசி இடம் இது!

முந்தைய ஆண்டான 2015-ல் நாட்டின் மொத்த அன்னிய முதலீடு ஈர்ப்பில் 13.1 சதவிகிதத்தை தன்னகத்தே வைத்திருந்த தமிழ்நாடு, 2016-ல் 2.9 சதவிகிதத்திற்கு வீழ்ந்தது. இந்தச் சூழலில் நடப்பு ஆண்டு தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலிலும் தமிழகம் பின்னோக்கிப் பாய்வது தொழில்துறைக்கு கவலை தரும் அம்சமாகும்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close