ஆர்.சந்திரன்
கடந்த வார இறுதியில், நிகர சரிவில் இருந்த இந்திய பங்குசந்தை, இந்த வாரத்தின் முதல் நாள் வணிகத்தில் முன்னேற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 295 புள்ளிகள் ஏற்றம் கண்டு 34,300 என்ற நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 10,540 என்ற அளவிலும் வணிகத்தை முடித்துள்ளன.
இன்றைய வணிகத்தில் சிறு மற்றும் நடுத்தர மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் காட்டி, நம்பிக்கை அளித்துள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, மற்ற பல நாடுகளிலும் பங்குசந்தையின் போக்கு நம்பிக்கை அளிப்பதாகத்தான் இருந்தது. ஆசிய பசிபிக் நாடுகளின் பல சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் உள்ளன.
மறுபுறம், கடந்த வார இறுதியில் இந்திய பங்குசந்தைகள் இன்னொரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. இதன்படி, இந்திய சந்தைக் குறியீடுகளின் மீதான ஊக வணிகம், மற்ற நாட்டு சந்தைகளில் நடப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், இந்திய சந்தை வணிகம் இன்று எப்படி தொடங்கும் என்பதற்கு முன்னறிவிப்பு போல இருந்த சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளின் சந்தை வணிகம் இனி பலருக்கு திசைகாட்டியாக இருக்காது. ஆனால், இந்த திசைக்காட்டலே கூடுதல் ஊக வணிகத்துக்கு பாதை போடுவதாக இருந்ததுதான் பிரச்னை. எனவே, சாமானியனைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் இந்திய சந்தையின் ஆரம்ப வணிகம் கூடுதல் புதிர் நிறைந்ததாக இருக்கும்.
நாளை செவ்வாயன்று, மஹா சிவராத்திரியை ஒட்டி, இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.