புதிய ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கதிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2000 நோட்டு அச்சிடும் பணி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. மேலும், புதிய ரூ.200 அறிமுகப்படுத்தும் முடிவு மத்திய நிதியமைச்சகத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புதிய ரூ.200 நோட்டு அடுத்த மாதம் முதல் புழக்கதிற்கு வரும் என ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது எனவும், முதல் கட்டமாக 100 கோடி எண்ணிக்கையிலான புதிய நோட்டுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ரூ.2,000 நோட்டுகள் அச்சிடும் பணி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது என தெரிவித்துள்ள அவர், நடப்பு நிதியாண்டில் இந்த (ரூ.2,000) மதிப்பில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சில்லறைத் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி தற்போது கவனம் செலுத்தி வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.