/indian-express-tamil/media/media_files/2025/10/07/bvr-subrahmanyam-2025-10-07-12-57-23.jpg)
NITI Aayog CEO BVR Subrahmanyam
புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை உலக அரங்கில் உயர்த்துவதற்காக, மத்திய அரசு அடுத்த கட்டப் பெரும் சீர்திருத்தத் தொகுப்பை விரைவில் வெளியிடத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்பே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உற்பத்தித் துறையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற, வரிக்கட்டணங்களைக் (Tariffs) குறைப்பது மற்றும் வரியில்லா தடைகளை நீக்குவது மிகவும் அவசியம் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உற்பத்தியின் சவாலை முறியடிக்கும் தேசியக் கொள்கை!
உற்பத்திக்குத் தேவையான பல இடைநிலை மூலப்பொருட்களுக்காக இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருக்கிறது. இந்த முக்கியப் பிரச்னையைச் சரிசெய்யும் நோக்கத்துடன், வரவிருக்கும் தேசிய உற்பத்தி கொள்கை (National Manufacturing Policy - NMP) வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"புதிய கொள்கை, உற்பத்திச் குவிமையங்களில் (Clusters) அதிக கவனம் செலுத்தி, வர்த்தகத்துக்கான உலகத் தரம் வாய்ந்த சூழலை இந்தியாவில் உருவாக்கும். இதன்மூலம், இந்தியா 'மேட் இன் இந்தியா' முத்திரையுடன் உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ராஜீவ் கௌபா குழுவின் அறிக்கை:
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி (GST 2.0) போன்ற பெரும் பொருளாதார மாற்றங்களைக் கண்ட இந்தியா, இப்போது அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்களை நோக்கி நகர்கிறது. முன்னால் அமைச்சரவைச் செயலாளரான ராஜீவ் கௌபா தலைமையிலான குழு, வளர்ந்த இந்தியாவிற்கான (Viksit Bharat Goals) சீர்திருத்தங்கள் குறித்த முதல் கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த அறிக்கைதான் தீபாவளிச் சீர்திருத்தங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டியதன் அவசியத்தையும் நிதி ஆயோக் தலைமை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
"அமெரிக்காவின் புதிய வரிகள் இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதிக்காமல் இருக்க, நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தம் முடிவடைய வேண்டும். இல்லையெனில், அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படலாம்" என்று அவர் எச்சரித்தார்.
சிறு நிறுவனங்களின் தலைவலி: தரக் கட்டுப்பாட்டு ஆணை (QCO)
தரத்தை உயர்த்துவதற்காக அமலுக்கு வரும் புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணை (QCO), சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு (MSME) பெரும் சவாலை உருவாக்குகிறது. பிஐஎஸ் ஹால்மார்க் மற்றும் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்களிடம் மட்டுமே மூலப்பொருள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனைகள், சிறிய நிறுவனங்களின் கதவுகளை நிரந்தரமாக மூடிவிட வாய்ப்புள்ளது.
இதைச் சமாளிக்க, தரக் கட்டுப்பாட்டு ஆணையை கட்டம் கட்டமாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாஸ் மார்க்கெட் தயாரிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும், இந்தியாவைத் தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற, புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவுகளை உருவாக்கி, மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் தனது ('Trade Watch Quarterly') அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.