முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம், “பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று நம்பினால், மத்திய அரசு ஏன் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத்மாலா திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும், வங்கி மறுமூலதனமாக்கத்தை ஏன் செயல்படுத்த வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் 2014-ஆம் ஆண்டில் இருந்து பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து இப்போது அழிந்தேவிட்டது என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் 2004 – 2009 கால இடைவெளியில் 8.5 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார முன்னேற்றம் அதுதான். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் குறையத் தொடங்கியது. ‘பெருமப்பொருளியல் வலிமையாக உள்ளது’ என்று நிதியமைச்சர் கூறுகிறார். அப்படியெனில், ஆறு கோடி மதிப்புள்ள பாரத்மாலா திட்டத்தை ஏன் அறிமுகம் செய்ய வேண்டும்? ஏன் வங்கி மறுமூலதனமாக்கப்பட வேண்டும்?.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. ஆனால், கருப்பு பணம், வெள்ளைப் பணம் என்று ஒன்றுமேயில்லை. பணத்தின் மதிப்பு கருப்பு கிடையாது. அது எப்போதும் போலத் தான் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஒரு விஷயத்தை கூட சாதிக்க முடியவில்லை. கருப்பு பணத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
சிறு மற்றும் குறு தொழில்துறையை பணமதிப்பிழப்பு அழித்துவிட்டது. இதனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பெரு தொழில்துறைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்காது. ஆனால், சிறு மற்றும் குறு தொழில்துறை பல வேலை வாய்ப்புகளை உருவாக்குபவை.
ஏற்கனவே, பணமதிப்பிழப்பால் நாடு தள்ளாடிக் கொண்டிருந்த வேளையில், இந்த மத்திய அரசு “தி கிரேட் ஜிஎஸ்டி” திட்டத்தை அறிமுகம் செய்தது. தயவு செய்து இதனை ஜிஎஸ்டி என யாரும் அழைக்க வேண்டும். வேறு ஏதாவது பெயர் இருந்தால் வையுங்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிடக் கூடாது” என்றார்.
தொடர்ந்து பேசிய சிதம்பரம், “அதிக அளவிலான பண பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் பேமண்ட் சிறந்தது தான். நவம்பர் 2016-ல் 94 லட்சம் கோடியாக இருந்த ஆன்லைன் பரிமாற்றத்தின் மதிப்பு, ஜூலை 2017-ஆம் ஆண்டிலும் அப்படியே தான் உள்ளது.
நாங்கள் 2005-06-ல் வாட் வரித் திட்டத்தை அறிமுகம் செய்தோம். ஆனால், அப்போது மக்கள் அதனை எதிர்க்கவில்லை. ஏனெனில், நாங்கள் அந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னர், அதிகளவு உழைத்திருந்தோம்.
ஜி.எஸ்.டியை கப்பர் சிங் வரி எனலாம். மக்கள் ஜிஎஸ்டி-யை ‘மோசமான திட்டம்’ என்கிறார்கள். ஆனால், ஜிஎஸ்டி மோசமான திட்டம் இல்லை. ஜிஎஸ்டி சட்டம் தான் மோசமானது” என்றார்.