நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் நம்முடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. ஆனால், நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் இதன் விலை குறைவதை விட ஏற்றம் காண்பதே அதிகமாகவுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன
முன்னதாக, 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வந்து நாள்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. சுத்திகரிப்பு செலவு உள்ளிட்ட செலவுகளை சேர்த்து பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் வரி விதிப்பு முறை சேர்ந்து கொள்கிறது. இந்த வரி விதிப்பு முறையால் பெட்ரோல், டீசல் விலை ஏகத்துக்கும் உயர்ந்து கிடக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே மாறுபட்ட வரி விதிப்பு சதவீதம் நடைமுறையில் உள்ளதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடு காணப்படுகிறது.
சுங்க மற்றும் செஸ் வரியை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. பின்னர், ஒரு லிட்டருக்கு டீலருக்கான கமிஷன், இறுதியாக மாநில அரசின் வாட் வரி. இவை அனைத்தும் சேரும் போது, விலை உயர்கிறது. சுங்க வரி சதவீத கணக்கில் நிர்ணயம் செய்ப்படாமல் ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோலுக்கான சுங்க வரி லிட்டருக்கு ரூ.21.48, டீசலுக்கான சுங்க வரி லிட்டருக்கு ரூ.17.33.
வாட் வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தற்போது மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 என விற்கப்படுகிறது. அதேசமயம், அந்தமான் நிகோபார் தீவுகளில் லிட்டர் ரூ.61, கோவாவில் ரூ.65-க்கும் குறைவு இதற்கு காரணம் மாநில வரி விதிப்பு சதவீதத்தில் காணப்படும் வேறுபாடு.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் பெட்ரோலுக்கு 35 சதவீதம் வாட் வரி விதிக்கிறது. கேரளா 34 சதவீதம் விதிக்கிறது. ஆனால், கோவாவில் 17 சதவீதமும், அருணாசலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா மாநிலங்களில் 20 சதவீதமும் பெட்ரோலுக்கு வாட் வரி விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, டெல்லியில் டீலர் விலை ரூ.30.19, சுங்க வரி ரூ.17.33, டீலர் கமிஷன் ரூ.2.50 எனவே டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.50-ஆக இருக்க வேண்டும். ஆனால், அங்கு வாட் வரி 27 சதவீதம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு விற்கும் போது விலையில் அதிகளவு ஏற்றம் காணப்படுகிறது. எனவே, டீலரிடம் லிட்டருக்கு ரூ.30.48 என்ற பெட்ரோல் விலை, வாடிக்கையாளர்களுக்கு போகும் போது ரூ.70.52 என்றாகிறது. இது கிட்டத்தட்ட 231 சதவீத உயர்வாகும்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி மூலம் மாநிலங்கள் வசூல் செய்த தொகை கடந்த 2015-16-ஆம் ஆண்டில் ரூ.1.42 லட்சம் கோடியாக இருந்தது. இது 2016-17-ஆம் ஆண்டில் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இதே ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி வசூல், ரூ.1.78 லட்சம் கோடியில் இருந்து 35 சதவீதம் உயர்ந்து ரூ.2.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மத்திய – மாநில அரசுகள் வருவாய் ஈட்டுகின்றன.