நீங்கள் வாங்கிய, உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்தால் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வீட்டுக்கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான சிறந்த நேரத்தை இப்போது பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக, 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு ரூ .75 லட்சம் வீட்டுக் கடனை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது ஒரு மாதத்திற்கு ரூ .55,424 என்ற ஈ.எம்.ஐ செலுத்த வேண்டும். மேலும் 25 ஆண்டுகளில், ரூ .75 லட்சத்தின் அசல் மற்றும் 91.2 லட்சம் வட்டிக்கு திருப்பிச் செலுத்துவீர்கள்.
அதிக வட்டி
வீட்டுக் கடன் ஈ.எம்.ஐக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது இப்போது உங்களுக்குத் தெரியாவிட்டால், இங்கே ஒரு சுருக்கமான ஆனால் முக்கியமான புதிய தகவல் உங்களுக்காக, EMI என்பது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்ந்தது. ஆனால் ஆரம்ப ஆண்டுகளில், உங்கள் ஈ.எம்.ஐ.யின் பெரும்பகுதி வட்டியை நோக்கி செல்கிறது, அதே நேரத்தில் ஒரு சிறிய பகுதி அசல் திருப்பிச் செலுத்துதலை நோக்கி செல்கிறது.
மேற்கண்ட கடன் எடுத்துக்காட்டில், முதல் ஆண்டில், உங்கள் ஈ.எம்.ஐ.களில் கிட்டத்தட்ட 84 சதவீதம் வட்டியாக எடுத்துக் கொள்ளப்படும். ரூ .6.65 லட்சம் வருடாந்திர இ.எம்.ஐ (12 x ரூ. 55,424) இல் 16 சதவீதம் மட்டுமே அசலை திருப்பிச் செலுத்துகிறது. இது 10 ஆம் ஆண்டில் வட்டிக்கான பங்கு 69 சதவீதமாகக் குறைகிறது. 20 ஆம் ஆண்டில் மேலும் குறைந்து, வட்டிக்கான பங்கு 34 சதவீதமாகக் குறைகிறது.
எனவே, ஒவ்வொரு மாதமும், ஈ.எம்.ஐ.யில் வட்டிக்கான பங்கு சிறிது குறைகிறது, அதே நேரத்தில் அசல் திருப்பிச் செலுத்தும் பங்கு உயர்கிறது. ஆனால் மாதாந்திர ஈ.எம்.ஐ தொகை கடைசி வரை ஒரே அளவாக இருக்கும்.
கடனை திருப்பிச் செலுத்தும் நேரம்
ஆரம்ப ஆண்டுகளில் ஈ.எம்.ஐ யின் பெரும்பகுதி வட்டிக்காக எடுக்கப்படுவதால், ஆரம்ப ஆண்டுகளில் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் நிறுவனத்திடமிருந்து நீங்கள் போனஸ் பெறுகிறீர்கள் அதனால் கடனில் ஒரு பகுதியான ரூ .15 லட்சத்தை முன்கூட்டியே செலுத்த விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் கடனை முன்கூட்டியே செலுத்தவில்லை என்றால், வட்டியுடன் செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ .91.2 லட்சம். கடன் காலம் 25 ஆண்டுகளாக இருக்கும்.
அதேநேரம், 2 வது ஆண்டில் ரூ .15 லட்சம் முன்கூட்டியே செலுத்த விரும்பினால் செலுத்தப்பட்ட மொத்த வட்டி ரூ .47.1 லட்சமாக குறையும்! எனவே, நீங்கள் ஒரு பெரிய ரூ .44 லட்சத்தை சேமிக்கிறீர்கள். உங்கள் கடனில் கால அளவு எட்டு ஆண்டுகள் குறைகிறது.
இதுவே, 12 ஆம் ஆண்டில் ரூ .15 லட்சம் முன்கூட்டியே செலுத்த விரும்பினால் செலுத்தப்பட்ட மொத்த வட்டி ரூ .73.4 லட்சமாக குறையும். எனவே நீங்கள் ஒரு சிறிய ரூ .18 லட்சத்தை சேமிக்கிறீர்கள்.
எனவே, கடனின் ஆரம்பகாலத்தில் ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்துவது, அதே தொகையை கடன் முடியும் கால கட்டத்தில் முன்கூட்டியே செலுத்துவதை விட அதிக லாபம் ஈட்டக்கூடியது.
நிலையான திருப்பிச் செலுத்துதல்
முன்கூட்டியே செலுத்துவதற்கு உங்களிடம் மொத்த தொகை இல்லையென்றால் என்ன செய்வது? ரூ .10,000 கூடுதலாக மாதமாதம் முன்கூட்டியே செலுத்தத் தொடங்க விரும்பினால் என்ன செய்வது?
மூன்றாம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ .10,000 செலுத்த தொடங்கினால் செலுத்தப்படும் மொத்த வட்டி ரூ .63.1 லட்சம். 13 ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் ரூ .10,000 செலுத்த தொடங்கினால் செலுத்தப்படும் மொத்த வட்டி ரூ .83.3 லட்சம்.
எனவே மாதாந்திர முன்கூட்டியே செலுத்தும் விஷயத்தில் கூட, விரைவில் நீங்கள் தொடங்குவது நல்லது. ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சில ஆயிரம் உங்கள் வட்டி குறையும்.
பலருக்கு, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ கடனை முன்கூட்டியே செலுத்துதல் கடினம். ஆனால் ஒவ்வொரு மாதமும் சில கூடுதல் ஆயிரங்களை செலுத்துவது, அவர்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். முன்கூட்டியே பணம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துவதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.