கட்டுரையாளர்: தேவராஜ் பெரியதம்பி
2024ம் ஆண்டில் உலகளவில் பொருளாதாரம் சவால்களை சந்தித்த போதிலும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நல்ல வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 3000 புள்ளிகள் வரை உயர்ந்து 13.5 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடனான சென்செக்ஸ் 9500 புள்ளிகள் வரை உயர்ந்து 13 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகள் பல முறை ஏற்றத்தையும் இறக்கத்தையும் இந்த ஆண்டில் சந்தித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் இரு குறியீடுகளும் உச்சத்தை தொட்டன. அதன்பிறகு கடந்த இரண்டு மாதங்களில் சந்தை சரிவை சந்தித்து தற்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.
தொடர்ந்து அதிகரிக்கும் டீமெட் கணக்குகள்
கோவிட்-க்கு முன்பு அதாவது 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் 4.1 கோடியாக இருந்த டீமெட் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தின்படி 18 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது பங்குச்சந்தை முதலீடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் முதலீட்டு வகையாக முழுமையாக மாறிவிட்டது. இதில் சிலர் தாங்களாகவே முதலீடு செய்து வருகின்றனர். சிலர் ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்து வருகின்றனர். இருதரப்பினரும் கோவிட்-க்கு பிறகு கணிசமான லாபத்தை பங்குச்சந்தை மூலம் ஈட்டியுள்ளனர். இந்த லாபம் பலருக்கும் ஒரு புதுவித நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த சூழலில் 2025-ம் ஆண்டு வரப்போகிறது. உலகளவில் பொருளாதார சூழல் மாறிவருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இருக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. உலக பொருளாதாரம் 2.7 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக வளர்ச்சி குறையும் என ஜேபி மார்கன் கணித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பொருளதார வளர்ச்சியும் வரும் ஆண்டில் 2 சதவீதமாக குறையும் என ஜேபி மார்க்கன் கணித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் மிகப் பெரிய சவாலாக இருந்துவருகிறது.
இப்படியான சூழலில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வரும் ஆண்டில் சரியான பாதையில் அமைத்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதுகுறித்து முதலீட்டுக்களம் நிறுவனரும் முதலீட்டு ஆலோசகருமான ஷ்யாம் சேகர் கூறுகையில், ”இந்தியாவுக்கு பல சவால்கள் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை வெளியில் எடுத்துச் செல்கின்றனர். வரும் ஆண்டில் சந்தைக்கு வரக்கூடிய பணத்தை விடவும், நிறுவனங்களுக்கு தேவைப்படக்கூடிய முதலீடுகளின் தேவை அதிகமாக இருக்கும். முதலீட்டாளர்கள் அதிகளவு பணத்தை திரட்ட சந்தைக்கு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு குறைவாகவே முதலீடு குறைவாக இருக்கும். அப்படி முதலீட்டு தட்டுப்பாடு ஏற்படும் பொழுது நிறுவன மதிப்பு குறையும்” என்று கூறினார்.
அசட் அலகேஷன் குறித்து கூறும்பொழுது, ”வரும் ஆண்டில் அசட் அலகேஷனை முறையாக பின்பற்ற வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க்கை வரும் ஆண்டில் குறைத்துக் கொள்ள வேண்டும். ஈக்விட்டிக்குள் லார்ஜ் கேப் சார்ந்த முதலீடுகளையும் ஈக்விட்டி தவிர்த்து மற்ற சொத்துவகைகளையும் முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். புது முதலீட்டாளர்கள் சந்தைக்கு வந்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு வரும் ஆண்டில் முதலீட்டு அனுபவம் எப்படி அமையும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது” என்று ஷ்யாம் சேகர் கூறினார்.
முதலீட்டாளரும் எழுத்தாளருமான செல்லமுத்து குப்புசாமி கூறுகையில், ”குறைந்த வட்டி விகிதத்துக்கான காலம் முடிந்துவிட்டது. முன்புபோல் ஈக்விட்டியில் அதிகளவு முதலீட்டு செய்வது குறையும். ஆனால் பங்குச்சந்தை வளர்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கும். தற்போதையை உலக பொருளாதார சூழலில் இந்தியா தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கக்கூடிய நாடாகவே உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் வாய்ப்புகள் அதிகளவு உள்ளன. எந்த பங்கில் போட்டாலும் பணத்தை பெருக்கிவிடலாம் என்ற நிலை இனி இருக்காது. இருப்பினும் சந்தையில் போதுமான வாய்ப்புகள் உள்ளன. அதை கண்டறிந்து நாம் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போதையை சூழலில் அசட் அலகேஷன் என்பது மிக முக்கியமானது. ரிஸ்கை புரிந்து கொண்டு ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், குறைந்த அளவு பணத்தை தொடர் முதலீடாகவும், சந்தை விழும்போது அதிகளவும் முதலீடு செய்ய வேண்டும். இந்த புரிதல் மிக முக்கியம். எல்லோருக்கும் முதலீட்டில் வெவ்வேறு ஸ்டைல் என்பது இருக்கும். ராகுல் ட்ராவிட்டும் ரோஹித் சர்மாவும் கிரிக்கெட்டில் சாதனையாளர்கள்தான். ஆனால் இருவருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கிறது. ஒருவர் அதிரடியாக விளையாடக்கூடியவர். மற்றொருவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள். அவரவர் ஸ்டைலுக்கு ஏற்ப முதலீடு செய்தால் உங்களுக்கு இன்னும் வெற்றி எளிதாக கிடைக்கும்.
2025ம் ஆண்டு வரவிருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, முதலீடுகளை காட்டிலும் பணம் சம்பாதிக்கும் திறன்களில் அதிகம் கவனம் செலுத்துங்கள். தன்னுடைய வேலை தொடர்பாகவும் அல்லது மற்ற திறன்களை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது இன்னும் எளிதாகிவிடும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.