தலைமை நிர்வாகியின் ஆண்டு வருமானம் ரூ.150.7 கோடி: டெக் மஹிந்த்ரா அதிரடி

டெக் மஹிந்த்ரா நிறுவனம் தனது நிர்வாகிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.

தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.150.7 கோடி ஆண்டு வருவாய் அளித்ததன் மூலம், டெக் மஹிந்த்ரா நிறுவனம் தனது நிர்வாகிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.

டெக் மஹிந்த்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சி.பி.குர்நாணி. மென்பொருள் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், நாட்டின் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டெக் மஹிந்த்ரா நிறுவனத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு குர்நாணி இணைந்தார். அதன் பின், ஐந்தாண்டுகள் கழித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த அவரது ஆண்டு வருவாய் ரூ.150.7 கோடி.

ஊதியம் மற்றும் பி.எஃப் தொகையின் மூலம் சுமார் ரூ.2.56 கோடியை அந்நிறுவனம் இவருக்கு அளித்துள்ளது. அதே சமயம், பணிபுரியும் குறிப்பிட்ட சிலருக்கு சலுகை விலையில் அல்லது நிலையான விலையில் விற்கப்படும் பங்குகளின் மூலம் இவருக்கு கிடைத்த வருவாய் ரூ.147.17 கோடி. முடிந்த நிதியாண்டில் அவர் ஈட்டிய வருவாய், நாட்டின் மற்ற மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்களான டி.சி,எஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவன உயர் அதிகாரிகளின் வருவாய் கூட்டுத் தொகையை விட அதிகமாகும்.

“டெக் மஹிந்த்ரா நிறுவனம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்துடன் கூட்டு நிறுவனமாக இருந்த போது, டெக் மஹிந்த்ராவில் குர்நாணி இணைந்தார். அப்போது, தனது இரு ஊழியர்களுக்கு சலுகை விலையில் டெக் மஹிந்த்ரா நிறுவனம் பங்குகளை அளித்தது. அதில், குர்நாணியும் ஒருவர். அந்நிறுவனத்தின் அப்போதைய பங்குகளின் விலை, பங்கு ஒன்றுக்கு ரூ.30-ஆக இருந்தது. டெக் மஹிந்த்ரா நிறுவனத்துடன் சத்யம் நிறுவனம் இணைக்கப்பட்ட போது, அவர் சிறப்பாக செயல்பட்டார். அந்த சமயத்தில் நிறுவன பங்குகளின் விலை பல மடங்காக உயர்ந்தது. எனவே, இதனை பெற அவர் தகுதியுடையவர்” என நிர்வாக தேடல் நிறுவனமான ஹெட்ஹன்டர்ஸின் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான கிரிஸ் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து டாடா நிறுவன தலைவராக உயர்ந்த என்.சந்திரசேகரின் ஆண்டு வருவாய் ரூ.30.15 கோடியாக அதிகரித்துள்ளது. விப்ரோவின் அபிடாலி நீமுச்வாலாவின் வருவாயும் உயர்ந்துள்ளது. ஆனால், இன்போசிஸ்-ன் விஷால் சிக்காவின் வருவாய் ரூ.45.11 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், நாட்டின் நான்காவது இடத்தில் இருப்பதும், ஜூன் – ஜூலை ஆகிய மாதங்களை நிதியாண்டாக கொண்டு செயல்படும் எஹ்.சி.எல் நிறுவனம் அதனுடைய விவரங்களை இதுவரை பகிரவில்லை.

இதனிடையே, நிர்வாகிகளுக்கு அதிக ஊதியம் ஈட்டித் தரும் என்ற பெயரை டெக் மஹிந்த்ரா மீண்டும் பெற்றுள்ளது. கடந்த 2015-16 நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் வினீத் நாயர் என்பவரின் வருவாய் ரூ.179.5 கோடியாக இருந்தது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான நாயர், கார்ப்பரேட் நிறுவனத்துக்குள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அடியெடுத்து வைத்தவர். டெக் மஹிந்த்ராவின் நிர்வாக பணிகளில் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், அதன் துணைத் தலைவராக நீடித்து வருகிறார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த 2014-15 நிதியாண்டுகளில் குர்நாணி ரூ.165.5 கோடி வருவாய் ஈட்டினார். அதற்கு அடுத்த நிதியாண்டில் ரூ.45.2 கோடி வருவாய் ஈட்டினார். தற்போது ரூ.150.7 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளார். ஆனால் இது, கடந்த 2014-15 நிதியாண்டுகளில் அவர் ஈட்டிய வருவாயை விட குறைவானதாகும். மார்ச் 31, 2017 நிலவரப்படி சுமார் ரூ.191 கோடி மதிப்புள்ள அந்நிறுவனத்தின் 0.5 சதவீத பங்குகளை குர்நாணி தன் வசம் வைத்திருந்தார்.

கடந்த 2014-15-ஆம் நிதியாண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் இத்தகைய நிறுவன நிர்வாகிகள் ரூ.60-67 கோடி ஆண்டு வருவாயே ஈட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close