வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!!

வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை இன்றைய தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தேதியை நீட்டிக்கும் திட்டம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை இன்றைய தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தேதியை நீட்டிக்கும் திட்டம் இல்லை எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள், 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர்.

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விடுமுறை நாளான நேற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோர் நேரில் வந்து தங்களது கணக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்கள் அல்லது இணையதளம் வாயிலாக தங்கள் கணக்குகளை இன்றைய தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு வசதியாக கூடுதல் சிறப்புக் கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

இணையதளம் மூலமாக 2 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள். கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close