திங்கள்கிழமை வர்த்தகத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 4 விழுக்காடு வரை உயர்வை கண்டன.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (அக்.31) வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 786.74 (1.31%) புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை 225.4 (1.27%) பங்குகளும் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
30 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பி.எஸ்.இ.,யில் டாக்டர் ரெட்டிஸ் லேப், இண்டஸ்இந்த், என்டிபிசி நிறுவன பங்குகள் தவிர மற்ற பங்குகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
குறிப்பாக அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் 4.18 சதவீதம் (ரூ.269.25) வரை உயர்வு கண்டு தற்போது ஒரு பங்கின் விலை ரூ.6,713.35 ஆக உள்ளது.
இதேபோல் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், கோடாக் மகிந்திரா, லார்சன் அண்ட் டர்போ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் லாபத்தில் வணிகமாகின.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், இண்டஸ்இந்த் வங்கி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தையும், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அதானி எண்டர்பிரைசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தையும் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ) அல்ட்ராடெக் சிமெண்ட் ரூ.269.10 (4.17%) உயர்ந்து ரூ.6,714.95 ஆக உள்ளது.
உலக சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன. இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ, வங்கி மற்றும் நிதிசார்ந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil