ஆர்.சந்திரன்
வரும் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து நம்பிக்கை தராமல், தொடர்ந்து சரிவிலும், சோம்பல் முறிப்பதிலும் இருந்து வந்த இந்திய பங்குசந்தை, இன்று நம்பிக்கை அளிப்பதாக வணிகத்தை முடித்துள்ளது.
காலை வணிகம் தொடங்கியது முதலே சந்தையில் சுறுசுறுப்பையும், ஏற்றத்தையும் காண முடிந்தது. படிப்படியாக உயர்ந்த சந்தை வணிக நிறைவில் - மும்பைக் குறியீட்டெண் 323 புள்ளிகளும், தில்லி குறியீட்டெண் 108 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. அதனால், சென்செக்ஸ் 34,142 என அளவிலும், நிப்டி 10,491 என்ற நிலையிலும் முடிந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், இன்றைய வணிகத்தில் உலோகத்துறை பங்குகளும், வங்கி மற்றும் மருந்து உற்பத்தித் துறை பங்குகளும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டின.
F & O என குறிப்பிடப்படும் ஊக வணிகத்தில் மார்ச் மாதத்தின் வணிகம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை இன்றைய சந்தையின் ஏற்றம் தெரிவிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மைய வங்கி வட்டடாரங்களில் இருந்து வரும் தகவல்கள் - அங்கு வட்டி விகிதங்கள் அவ்வளவு விரைவாக, வேகமாக உயராது - இன்றைய சந்தை ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.