இந்த வரிவிதிப்பு முறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், சில பொருட்களின் விலை உயரவும், சில பொருட்களின் விலை குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வரிவிதிப்பு முறையினுள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படவில்லை.
பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதற்கு முன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்து வந்தன. இந்த நடைமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் மாற்றியமைத்து வருகின்றன.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பால் இதனுடைய விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் இந்த விலையானது, தற்போதைய நிலையை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை மத்திய, மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. அதேசமயம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அதிகபட்சமாக 28 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்க முடியாது என்பதால் இதனுள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பொருளாதார வல்லுனர்கள், “மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர விரும்பாது. வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தான் இதனுடைய முக்கிய காரணம்” என கருத்து தெரிவித்துள்ளனர். அதிகபட்ச வரியாக 28 சதவீதம் விதித்தால் கூட பெட்ரோல், டீசல் விலை பாதியாகக் குறைந்து விடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.