நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
நடிகர் சங்கம் தொடர்பாக தனக்கு எதிரானவர்கள் அளித்த புகாரை பரிசீலித்த பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினர் சத்யா ஸ்டுடியோ நித்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்சினை உள்ள சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் சம்மந்தப்பட்ட இடத்தின் அருகே அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆய்வாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வேறு இடத்திற்கு தேர்தலை மாற்ற பரிந்துரைக்கும்படி சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு பட்டிணம்பாக்கம் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாக விஷால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஏற்கனவே சென்னை காவல் ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால், அதை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென விஷால் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.