கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெரும் தொற்றின் காரணத்தால், உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால், பல்வேறு விதமான இன்னல்களை மக்கள் சந்தித்து கடந்து வந்துள்ளனர். இதில், பெரும்பாலான பாதிப்பை சந்தித்தது மாணவர்களின் கல்வி தான். ஊரடங்கு சமையத்தில் தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வகுப்பினால் பாடங்கள் எடுத்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதுவே, மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பும் குறைந்துவிடுகிறது.
Advertisment
இதை சரி செய்ய, அரசு 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தினால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய உதவுகிறது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் தன்னார்வலர்களால் பாடங்களை செயல்முறையில் எளிமையாக கற்பித்து மாணவர்களின் கல்வி இடைவெளியை சரி செய்ய முயற்சிக்கின்றனர்.
இதைப்பற்றி தமிழ் இந்தியன் எஸ்பிரஸிடம் தஞ்சாவூரில் தன்னார்வலராக பணிபுரியும் வள்ளி கூறியதாவது:
Advertisment
Advertisements
"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதிதான், தஞ்சாவூரில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் கீழ் வரும் பாடங்களை கற்பிக்க தொடங்கினோம்.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்காகவும் அரசாங்கம் பாடத்திட்டம், கற்பிப்பதற்கு தேவையான பொருட்கள் ஆகியவை வழங்கி உள்ளது, அதன் படி நாங்கள் கற்பித்து வருகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல் மாதத்தில், குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாங்கள் ஆரம்பத்தில் ரைம்ஸ், பாடல், நடனம் போன்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக கையாண்டோம். இரண்டாவது மாதத்திலிருந்து, அடிப்படை கல்வி அளவிற்கு மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கினோம். அறிவியல் பாடத்தை முடிந்தவரை மாணவர்கள் மனதில் பதியும்படி கற்பித்து வருகிறோம்.
ஒரு தன்னார்வலர் அதிகபட்சம் 20 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. குழந்தைகள் 'இல்லம் தேடித் கல்வி' திட்டத்தின்கீழ் படிப்பதற்கு, அரசாங்கமே அரசு பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் மையம் அமைத்துத் தரும், இல்லையெனில், மாணவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் ஒவ்வொரு வார்டிற்கு ஏற்றார் போல அமைத்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தை பற்றியும், ஒவ்வொரு இடத்திலும் எத்தனை மையங்கள் இருக்கிறது என்கிற விவரங்களை பற்றியும் நாங்கள் அரசு பள்ளிக்கூடங்களுக்கு தெரிவிப்போம், அவர்கள் பெற்றோர்களிடம் கூறி தங்களின் குழந்தைகளை சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப உதவுவார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் படிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை ஆனால் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.
எங்கள் தினசரி நடவடிக்கைகள் மற்றும் வருகையை எங்கள் ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவிக்கிறோம். உதவிக் கல்வி அலுவலர் போன்ற அதிகாரிகள் வாரந்தோறும் ஒருமுறை அல்லது மாதந்தோறும் ஒருமுறை எங்கள் மையத்திற்குச் வருகைபுரிந்து, நாங்கள் எப்படி அனைத்தையும் நிர்வகிக்கிறோம் என்பதைச் சரிபார்த்து செல்வார்கள்.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 75 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்களிக்கின்றனர்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகள் 100% வருகையை வழங்கத் தொடங்கினர் மற்றும் கற்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். நாங்கள் வாரந்தோறும் 6 மணிநேரம் கற்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது, எனவே குழந்தைகளின் பள்ளி அட்டவணைக்கு ஏற்றார் போல நாங்கள் திட்டமிட்டு நடத்திவருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டின் பெருந்தொற்று காரணமாக, வர்த்தக ரீதியாக போராடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர். இது பள்ளி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் இன்னலை உருவாக்கும். ஆகையால் இதுபோன்ற திட்டங்கள் வெளிவருவது, குழந்தைகளின் கல்வி இடைவேளையை சரிசெய்து, அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது. இந்த திட்டம் குழந்தைகளின் கல்வியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பாடங்கள் மட்டுமில்லாமல், மேடை ஏறி பேசுவதற்கு பழக்கப்படுத்துதல், ஒவ்வொரு குழந்தைக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொண்டு வருதல் போன்றவை செய்து வருகிறோம்", என்று கூறுகிறார்.
தி.மு.க பிரமுகர் திரு.க.விஜயகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கியபோது
தஞ்சாவூர் நகரம் , எல்லை அம்மன் கோயில் தெரு இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு தனித் திறமை போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. நடைபெற்ற விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிகொண்டுவந்தனர். மேலும் தி.மு.க பிரமுகர் திரு.க.விஜயகுமார் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பரிசுகள் வழங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil