கொரோன பெருந்தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட வகுப்பு நேர இழப்பை ஈடுசெய்ய பாடத்திட்டத்தை திருத்தியமைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் பாடத்திட்டங்கள் மருசீரமைக்கப் பட்டிருக்கும் என்று சி.பி.எஸ்.இ வாரியத் தலைவர் மனோஜ் அஹுஜா தெரிவித்தார்.
"நாங்கள் பாடத்திட்டத்தை திருத்தியமைக்க இருக்கிறோம். பாடத்திட்டத்தில் இருக்கும் அவசியமான முக்கிய கூறுகளைத் தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஒரு மாத காலத்திற்குள் பாடத் திட்டங்களை இறுதி செய்ய முடியும் ” என்று தெரிவித்தார்.
கொரோனா பொது முடக்கத்தால் வகுப்பு நேரம் எவ்வளவு குறைகிறதோ அதற்கேற்ப பொதுத்தேர்வு ( X,XII) 2021ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்றுமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்கு உதவும் வகையில் மாற்றுக் கல்வி ஆண்டு காலஅட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் – என்சிஇஆர்டி வெளியிட்டது. மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த அட்டவணை உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
11,12ம் வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணை - அமைச்சர் வெளியீடு
முன்னதாக, ஊரடங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள், கல்லூரிகள், உயர்க் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், கல்வி நிறுவனங்கள் மட்டத்தில் பெற்றோர் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படும். இதில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிப்பது குறித்து ஜூலை 2020-இல் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil