Chennai IIT introduce free online course to school students: பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், சென்னை ஐ.ஐ.டி, ஜூலை 1 முதல் கணிதம் மூலம் சிந்திக்கும் புதிய ஆன்லைன் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தவிர, 10 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் படிப்பினை வழங்க சென்னை ஐ.ஐ.டி இலக்கு வைத்துள்ளது.
இந்த கோர்ஸில், பத்து வயதுக்குட்பட்ட மாணவர்கள், புதிர்களைத் தீர்ப்பது, தேதி எண்களின் வரிசைப்படுத்தல் மற்றும் வாரம்-நாட்கள் குறித்த கணக்கீடுகள், ஒற்றைப்படை-இரட்டை எண்கள், காட்சி விளக்கம், விடுபட்ட இலக்கங்கள், மாஸ்க் கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாட திட்டத்தின் முதல் நிலையில் படிப்பார்கள்.
பாடநெறி நான்கு தனித்தனியான நிலைகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இலவசமாகப் பதிவு செய்யலாம். மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் இரண்டு மணிநேர பாடங்கள் என பத்து வாரங்கள் ஆன்லைனில் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது அசைன்மெண்ட் வழங்கப்படும். அவர்கள் இறுதித் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களுடன் சான்றிதழ்களைப் பெறுவார்கள். முதல் இரண்டு நிலைகளில் ஒவ்வொன்றும் 20 மணிநேர பதிவு செய்யப்பட்ட வீடியோ அமர்வுகள் உள்ளன, நிலைகள் 3 மற்றும் 4 ஒவ்வொன்றும் 30 மணிநேர வீடியோ அமர்வுகளைக் கொண்டுள்ளன.
"இந்தப் பாடநெறி மாணவர்களுக்கு மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மூலம், சிக்கல்களைத் தீர்ப்பதில் பயிற்சியளிக்கும். ஒரு மாணவர் 100 மணிநேரம் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தால், அது அவருக்கு வழக்கத்திற்கு மாறான சிந்தனையை அறிமுகப்படுத்தும். அது ஒலிம்பியாட் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற அவர்களுக்கு உதவும்" என்று ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் வி.காமகோடி கூறினார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு மாதிரிகளை பரிசோதனை செய்து ஆய்வு செய்த பின்னரே இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாடநெறி சென்னை ஐ.ஐ.டி பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் முன்முயற்சியாகும்.
இதையும் படியுங்கள்: 40% வகுப்புகளை ஆன்லைனில் நடத்த யூ.ஜி.சி அறிவுறுத்தல்; கல்வியாளர்கள் அதிருப்தி
இறுதித் தேர்வு நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வாக நடைபெறும். சர்வதேச மாணவர்களும் இந்தப் படிப்பிற்கு பதிவு செய்யலாம். கிரேடிங் முறைப்படி, 85%க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிரேடு ஏ பெறுவார்கள். 70% மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் கிரேடு B ஐப் பெறுவார்கள். 55% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிரேடு C பெறுவார்கள்.
இந்த கோர்ஸூக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 24. இந்தப் பாடத்திட்டத்தை கணிதக் கல்வியாளரும், ஆர்யபட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேதமேட்டிக்கல் சயின்ஸ் நிறுவனரும் இயக்குனருமான சடகோபன் ராஜேஷ் கற்பிப்பார், என்றும் ஐஐடி இயக்குனர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil