கலைக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு… புதிய கல்விக் கொள்கையால் எழும் அபாயம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

கல்வித்துறைக்கு இது போன்ற மோசமான முறைகளை பரிந்துரைத்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால் ஏற்படும் ஆபத்தை அரசியல் தலைவர்கள் எப்போது புரிந்துகொள்வது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அபாய மணி ஒலிக்கிறார்.

new education policy, nep 2020, prince gajendra babu, புதிய கல்விக் கொள்கை, பிரின்ஸ் கஜேண்திரா பாபு, Educationist Prince Gajendra Babu, aicte chairman sahasrabudhe, கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, ஏஐசிடிஇ, சஹஸ்ரபுத்தே, compulsory entrance exam for all higher education courses

இதுவரை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

அனைத்து கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், ஏழை எளிய மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு, கல்வித்துறைக்கு இது போன்ற மோசமான நுழைவுத் தேர்வு முறைகளை பரிந்துரைத்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதனால், ஏற்படும் ஆபத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை, அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அபாய மணி ஒலிக்கிறார்.

இது குறித்து, ஐ.இ. தமிழ் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது: “இந்தியாவில் இன்னும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம் அப்படியேதான் இருக்கிறது. யுஜிசி சட்டப்படி ஒரு பல்கலைக்கழகத்தில் அதன் கல்லூரிகளில் ஒரு மாணவனை சேர்த்துக்கொள்வதற்கு என்ன கல்வித் தகுதி வேண்டும் என்பதை பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யும். இன்றுவரை 10 + 2 தான் அதற்கான கல்வித் தகுதியாக உள்ளது.

இப்போது ஏஐசிடிஇ தலைவர் கூறியிருப்பது புதிய கல்விக் கொள்கை 2020-ல் இருப்பதைத் தான் கூறியிருக்கிறார். தேசிய தேர்வு முகமை அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் தகுதித்தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்துதான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.

ஜனநாயகம் பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், தேசிய கல்விக் கொள்கை பற்றி நாடாளுமன்றத்தில் லோக் சபாவிலும் ராஜ்யசபாவிலும் விவாதிக்கப்படவில்லை. நேடியாக சட்டம் அமல்படுத்தப்படுவதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது..

கல்வி பொதுப்பட்டியலில் வருகிறது. அப்படியென்றால், அதில், மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை மத்திய அரசு முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எந்த மாநில அரசுகளும் புதிய கல்விக் கொள்கை குறித்து இன்னும் முழுமையாக விவாதிக்கவில்லை. இதனை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக்கொண்டன? இதில், மாநிலங்களின் நிலைப்பாடு என்ன?

அரசியலமைப்பு சட்டம் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலத்துக்கு இருக்கக்கூடிய உரிமையை மத்திய அரசு, தான் நினைத்த மாதிரி எல்லாம் மாற்ற முடியாது என்று டாக்டர் அம்பேத்கர் விளக்குகிறார். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமை. அதனை புரிந்துகொண்ட அத்தகைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தமிழக மக்கள் அனுப்ப வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்றுக்கொண்டு நடந்தால், அரசியலமைப்புபடி, புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தவே முடியாது.

புதிய கல்விக் கொள்கை 2020 பள்ளிக் கல்விக்கும் கல்லூரிப் படிப்புக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறது. மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று கூறுகிறது.

நீட் தேர்வு என்பது மருத்துவப் படிப்புக்கு மட்டும் என்று நாம் ரொம்ப நாளாக தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தொடக்கத்தில் இருந்து நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். நீட் தேர்வை எந்த விதமான நிபுணர் குழுவும் பரிந்துரைக்கவில்லை. நிபுணர் குழு பரிந்துரைத்தது சி.எம்.இ.டி தான். அதையும்கூட விரும்பாத மாநிலங்களுக்கு விளக்கு அளியுங்கள் என்று ரஞ்சன் ராய் சௌத்ரி நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதை நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியின் பொது இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடக்கிறது. அதைத் தடுப்பதற்காக சி.எம்.இ.டி வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் நீட் வேண்டும் என்று சொல்லவில்லை.

நீட் (NEET) என்பதில் மெடிக்கல் என்ற வார்த்தை எங்கே இருக்கிறது. இந்த நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கு மட்டுமல்ல அனைத்து படிப்புகளுக்கும் அமல்படுத்தப் போகிறார்கள் என்று கூறினோம். இப்போது அது உண்மையாகிவிட்டது இல்லையா? இது பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கு பரிசீலிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். இப்போது, பிஎஸ்சி பாட்டனி, பிஎஸ்சி மைக்ரோ பயலாஜி போன்ற படிப்புகளில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கைபற்றி கருத்து தெரிவித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு, “இந்த புதிய கல்விக் கொள்கை அனைத்து குழந்தைகளும் 6ம் வகுப்பில் இருந்தே ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ரமேஷ் பொக்ரியால் ஒரு ஆங்கில நாளேட்டில், சமுதாயத்துக்கு தச்சு வேலை செய்பவர்கள் தேவை. இப்போது இருக்கும் பள்ளிகள் தச்சர்களை உருவாக்குவதில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்தால் பள்ளிகள் அத்தகைய திறன்கொண்ட மாணவர்களை உருவாக்கும்” என்று எழுதுகிறார். இதைவிட புதிய கல்விக் கொள்கையை யாரால் இவ்வளவு தெளிவாக எழுத முடியும்?

புதிய கல்விக் கொள்கைப்படி, 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புக்குள் குழந்தைகள் ஒரு வேலைத் திறனை கற்க வேண்டும். குழந்தைகள் கற்க வேண்டிய வேலைத்திறனை உள்ளூர் சமூகம் முடிவு செய்யும் என்கிறார்கள். அதாவது ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்றால் அந்த பள்ளியைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் எந்தெந்த தொழில்கள் இருக்கின்றன. அங்கே எந்தெந்த வேலைத் திறனுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் சொல்வார்களாம். பள்ளிக்கூடம் அதை வரைந்து குழந்தைக்கு இந்த வேலைக்கு எல்லாம் திறன்கள் தேவை இருக்கிறது. அதற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று தெரிவிக்குமாம். அந்த வேலைத்திறன் குழந்தையின் விருப்பத் தேர்வாக இருக்கும். அதாவது, குழந்தை மொழிப்பாடம், அறிவியல் பாடம், சமூக அறிவியல் பாடம் படிக்க வேண்டும் கூடுதலாக வேலைத் திறனையும் பழக வேண்டுமாம். அதோடு, 10 நாள் தொழில் நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டுமாம். அதாவது 11 – 13 வயது இருக்கும் குழந்தை அந்த தொழில் நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டுமாம். இந்த தொழிலை யார் வந்து கற்றுத் தருவார்கள் என்றால், உள்ளூரில் அந்த தொழிலை யார் செய்கிறார்களோ அவர்களே வந்து குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்களாம். இதற்கு பெயர் Vocational கல்வி இதற்கு வேலைக்கான கல்வி என்று பொருள.

தொழிற் கல்வி என்பது Proffessional Education, Technical Education என்பது தொழில்நுட்பக் கல்வி. Vocational Education என்பது வேலைத் திறன் கல்வி. 11-13 வயது குழந்தைக்கு வேலைவாய்ப்புக்கான ஒரு கல்வி தேவையா? இதனால், முதல் தலைமுறையாக வரும் பட்டாதாரிகள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்த வேலைத் திறன் கல்வி 12ம் வகுப்பு வரை தொடர்ந்து வரும் என்கிறார்கள். ஒரு மாணவருக்கு பள்ளிக் கல்வி சான்று, வேலைத் திறன் சான்று என 2 சான்றிதழ் இருக்கும் என்கிறார்கள். மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் கல்லூரியில் சேர்வதற்கு பரிசீலிக்கப்படாது என்கிறார்கள். நீங்கள் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி திறனை 12 வருடம் படித்த சான்றிதழ் தெரிவிக்காது. கல்லூரியோ அல்லது பல்கலைக்கழகமோ கூறாது. ஆனால், யார் சொல்வார்கள் என்றால் தேசிய தேர்வு முகமை கூறும் என்கிறார்கள். இது ஆபத்தானது.” என்று கூறினார்.

நாடு முழுவதும் அனைத்து கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு, “அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒன்று சாத்தியமா என்று கேட்கிறீர்கள். சர்வாதிகாரத்தில் எல்லாம் சாத்தியம்.” என்று கூறினார்.

இதற்கு அரசியல் ரீதியாக பெரிய எதிர்ப்புகள், போராட்டங்கள் இல்லையே. இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு, “மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வே அளிக்கப்படவில்லை. அரசியல் தலைவர்களுக்கும் இன்னும் விழிப்புணர்வே வரவில்லை. அரசியல் தலைவர்களுக்கு என்ன நடக்கிறதே என்று தெரியவில்லை. அரசியல் தலைவர்கள் இதை எப்போது புரிந்துகொள்வது? ” என்று கூறினார்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Educationist prince gajendra babu alarm about dangers of new education policys 2020

Next Story
அனைத்து கலை, அறிவியல் உயர்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் – ஏ.ஐ.சி.டி.இ தலைவர் சஹஸ்ரபுத்தே
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com