நாம் வாழும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி தலைமுறைகள் காணாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இவ்வளர்ச்சியினால் ஆண்டாண்டு காலமாக செய்துவந்த தொழில்கள் அழிவை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
இதனால், புதிய துறைகள் காலத்திற்கு ஏற்றவாறு உருவெடுத்து மக்களுக்கு பயனளிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆகவே மக்களினிடையே போட்டி அதிகரித்து, பலர் இங்கு தங்களுக்கு உகந்த வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். வேலைக்கு செல்லும் பெண்களும் சிறிய இடைவேளை வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் இந்த போட்டியிலிருந்து வெளியேறி விடும் அளவிற்கு காலம் மாறிவருகிறது. அதுவும் கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்நிலைமை இன்னும் மோசம் அடைந்துள்ளது.
இதனால், மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண்கள், தொழிலில் இடைவேளை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரிய நினைக்கும் பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது ‘பிளேக்சிபீஸ்’ எனப்படுகிற நிறுவனம்.
இதைப்பற்றி ‘பிளேக்சிபீஸ்ஸின்’ இணை நிறுவனர் தீபா நாராயண ஸ்வாமியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் கேட்டபொழுது, அவர் கூறியதாவது:
பெண்களுக்கான ‘பிளேக்சிபீஸ்’:
“’பிளெக்சிபீஸ்’ என்பது நானும் எனது இணை நிறுவனர்கள் (ஸ்ரேயா மற்றும் ரஷ்மி) உடன் இணைந்து தொடங்கிய நிறுவனமாகும். எங்கள் நிறுவனம் மூலம் பெண்களால் பகுதி நேர வேலை மற்றும் திட்ட அடிப்படையிலான வேலை ஆகியவற்றை அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பெறலாம்.
எங்கள் நிறுவனத்தின் மூலம் பகுதி நேர பணியாளர்களை எதிர்பார்க்கும் ஸ்டார்ட்-டப் நிறுவனத்திற்கு பயனளிக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில் வல்லுநர்களை தேர்ந்தேடுத்து கொடுக்கிறோம்”.
‘பிளேக்சிபீஸ்’ ஆரம்பித்ததற்கான காரணம்:
“சென்னையில் வளர்ந்த நான் (தீபா நாராயண சுவாமி), சி.ஏ., முடித்துவிட்டு ஐ.ஐ.எம்., பெங்களூருவில் எம்.பி.ஏ., முடித்தேன். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, மகப்பேறு விடுப்பு எடுக்கும் நிலைமை வந்தது. அதன்பிறகு, முழுநேர வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலை பார்க்க முற்பட்டேன். அப்போது வேலை கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள், போட்டிகளை பற்றி தெரிந்துகொண்டேன்.
என் பயணத்தின் மூலம், மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண்கள், தொழிலில் இடைவேளை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரிய நினைக்கும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. என்னுடன் ஐ.ஐ.எம்.,இல் படித்தவர்களுடன் (ஸ்ரேயா மற்றும் ரஷ்மி) இந்நிறுவனத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிறது”.
‘பிளேக்சிபீஸ்’ஸில் உள்ள கட்டுப்பாடுகள்:
திட்ட அடிப்படையிலும் பகுதி நேர அடிப்படையிலும் திறமையாளர்களுக்கான தேவை இங்கு உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உண்டு. அதற்கேற்றவாறு, வேலை செய்ய விரும்பும் பெண்களின் மத்தியில் இத்தகைய வாய்ப்பை சமர்ப்பிக்கிறோம்.
ஆனால் இவ்வாறு வேலை எதிர்பார்க்கும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன, எனவே அவர்களால் முழு நேர வேலை செய்ய முடியாது. தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் வசதி அவர்களுக்கு கிடைக்காது.
ஆரம்ப கட்டத்தில் அனுபவம் எப்படி இருந்தது?
இந்த நிறுவனத்தை தொடங்கும்பொழுது, இதனால் மக்களுக்கு பயனளிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஸ்டார்ட்-அப்களுக்கு எங்களின் சேவை தேவைப்பட்டதை உணர்ந்ததால் எங்கள் நிறுவனத்தை தைரியமாக தொடர்ந்தோம்.
மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் தங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நேரம் மற்றும் வசதிகள் இல்லை என்பதையும் உணர்ந்தோம். எனவே வேலைக்குச் செல்ல காத்திருக்கும் பெண் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற இடமாக எங்கள் நிறுவனத்தை அமைத்துக்கொண்டோம்.
நிறுவனத்திற்கான ஆட்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
எங்கள் நிறுவனத்திற்காக பிரத்யேகமான செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தில் பங்கேற்க நினைக்கும் பெண்கள், தங்களது அலைபேசியில் (Google Playstore அல்லது istore) மூலம் பதிவிறக்க செய்து, தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இங்கே வழங்க வேண்டியவை: தங்களது தேவைப்படும் வேலை வாய்ப்பு, பங்கேற்பாளரின் திறன்கள், கல்வி தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றை செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒருவரின் கல்வி தேர்ச்சியும், பணி அனுபவத்தை வைத்து அவர்களுக்கு ஏற்ற வேலையை இந்த நிறுவனம் பெற்று தரும்”, என்று உறுதியளிக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தால் எத்தனை பெண்கள் பயனடைந்துள்ளனர்?
இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் பதிவு செய்துள்ளனர். மீண்டும் பணிக்கு செல்ல நினைக்கும் பெண்கள் இந்த நிறுவனத்தில் பங்கேற்று தங்களது தன்னம்பிக்கை மேலும் மெருகேற்றுகின்றனர். தொழிலில் இடைவேளை எடுத்து மீண்டும் பணியில் சேர நினைக்கும் பெண்களில் பலர், இங்கு உயர்ந்த பதவியில் அமர்ந்து வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil