தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்- 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்விற்கு இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முக்கிய வழியாக கருதப்படும் இந்த தேர்வில் வருடந்தோறும் ஏறக்குறைய 5000 பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசின் பல்வேறு துறைக்குத் தேவையான பணியாளர்கள் இந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு மொத்தம் 7382 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது என்றும், இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் , டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
குரூப் 4 தேர்வுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். ஆனால், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் உள்ளது.
இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் பெயர் பட்டியல் பின்பு வெளியிடப்படும் என்று கூறினார்.
மார்ச் மாதம் குரூப் 2 தேர்வுக்கான பதிவு தேதிகள் முடிவடைந்ததையொட்டி, மே மாதம் 21ஆம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil