JEE Main 2021: Class XII criterion dropped : ஜேஇஇ (மெயின்) தேர்வின் அடிப்படையில், 2021- 22 கல்வி ஆண்டில், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NITs), இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள் (IIITs) , திட்டம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள் (SPAs ), மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தகுதியைப் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த கல்வியாண்டில் (2020- 21 கல்வி ஆண்டு)
ஐஐடி சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு கடந்த ஆண்டு தளர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், மேற்குவங்காளத்தின் ஷிப்பூரிலுள்ள இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் (இந்திய தொழில்நுட்ப கழகங்களைத் தவிர்த்து) இளங்கலைப்படிப்புக்கான சேர்க்கையானது, தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ (மெயின்)-இன் தரவரிசை/ தகுதியின் அடிப்படையில் நடைபெறும்.
ஜேஇஇ தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறிப்பிட்ட பள்ளி வாரியங்கள் நடத்தும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 20 சதவீதங்களுக்குள் மதிப்பெண் பெற வேண்டும். பட்டியலின/ பட்டியல் பழங்குடி மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் 65% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வின் தேதியை அறிவித்தபோது 2021-22 கல்வி ஆண்டில் தகுதி பெறுவதற்கு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி தளர்த்தப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.